தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் காலத்தே பயிர் செய்ய வசதியாக அதிமுக அரசு தேவையான விதை, உரம், யூரியா போன்ற இடுபொருட்களை குறித்த காலத்தில் வழங்கியது. மேலும், அறுவடை முடிந்த பிறகு, தமிழகம் முழுவதும் தேவைப்படும் இடங்களில் எல்லாம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, தமிழக விவசாயிகள் பயிரிட்ட அனைத்து நெல்மணிகளும் விரைவாக கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டது.

ஆனால், கடந்த 5 மாத கால திமுக ஆட்சியில், வேளாண் இடுபொருட்கள் முதற்கொண்டு உரங்கள் வரை உழவு பணிகளுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க பெறாமல் தமிழக விவசாயிகள் தவிக்கின்றனர். அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. முக்கியமாக, விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம் கிடைப்பதில்லை என்று கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, டெல்டா பகுதிகள் தவிர்த்து, கிணற்று பாசன பகுதிகளிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், தென் தமிழகத்தின் உட்பகுதிகள் என்று மாநிலம் முழுவதும் சுமார் 60 சதவீதம் வேளாண் பெருமக்கள் பயிர் செய்துவிட்டு, தற்போது பயிர்கள் வளர்ந்து வரும் சூழ்நிலையில், பயிர்கள் நன்றாக வளர்வதற்கும், விவசாயிகளுக்கு இந்த பருவத்திற்கு தேவையான குறிப்பிட்ட உரங்கள் எந்த கூட்டுறவு சங்கங்களிலும், விற்பனை கடைகளிலும் தேவையான அளவு இல்லை என்றும், தேவைப்படும் உரத்தின் விலை, கடைக்காரர்களாலும், விற்பனையாளர்களாலும் செயற்கையாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன.

ஆனால், திமுக அரசு இந்த பருவத்திற்கு தேவையான உரங்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி இருப்பு வைத்ததாகவோ, தேவைப்படும் மாவட்டங்களுக்கு வழங்கியதாகவோ தெரியவில்லை. தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது என்று இரண்டு நாட்களாக, செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. எனவே, தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்கள் முழு அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கவும், விவசாயிகள் உர தட்டுப்பாட்டால், குறிப்பிட்ட காலத்தில் பயிர்களுக்கு உரமிடாமல் கஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலையை போக்கவும், அரசு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: