ஆண்டிபட்டி அரசு அருங்காட்சியகத்தில் வாரவாரம் ஒரு பொருள்... இந்த வாரம் ‘கைராட்டை’: ஆர்வமுடன் ரசிக்கும் பொதுமக்கள்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் கைத்தறி துறையில் பழமை வாய்ந்த கைராட்டை கண்காட்சி நடந்தது.ஆண்டிபட்டி பகுதியில் தேனி-மதுரை நெடுஞ்சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியத்தில் பழமை வாய்ந்த பொருட்கள், வரலாற்று படைப்புடைய பொருட்கள், தேனி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் ஆண்டிபட்டி சுற்றியுள்ள மக்கள் அருங்காட்சியகத்திற்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த அருங்காட்சியகத்தில் ஒவ்வொரு மாதமும் ஓர் அரிய பொருளை மக்கள் அரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அரிய பொருள் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த மாதம் பழமை வாய்ந்த பொருளான கைராட்டை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியக காப்பாளர் கூறுகையில், ‘ராட்டை என்பது நூல் நூற்கும் சக்கரம் என்றும், நூல் நூற்றல் பஞ்சு இழைகளை பிரித்தெடுத்து அவற்றை நூலாக திரிக்கும் பணிக்காக இதனை பயன்படுத்துவார்கள். கைராட்டை கி.பி. 500 முதல் கி.பி 1000க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. தொழில் புரட்சிகளின் விளைவாக பல இயந்திரங்கள் ஜவுளி துறையில் ஆக்கிரமித்து இருந்தாலும், கைத்தறி இயக்கத்தின் அடையாளச் சின்னமாக இந்த கைராட்டை அமைந்துள்ளது. எனவே அதனை மக்கள் கண்டு அறிந்து கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: