அதிமுக ஆட்சியால் ரூ.6.50 கோடி அம்போ வஞ்சி ஓடை தடுப்பு சுவர்: பணி முடியும் முன்னே சரிந்தது

போடி: போடி குப்பிநாயக்கன்பட்டிக்கும், 33வது வார்டு சுப்புராஜ் நகருக்கும் இடையில் 1.900 கிலோ மீட்டர் அகன்ற ஆழமான வஞ்சி ஓடை இருக்கிறது. இந்த ஓடை ரயில்வே ஸ்டேஷன் டிவிகேகே நகர் வழியாக கடந்து ரயில்வே கிராஸ் முந்தல் மெயின் ரோடு வரையில் ெசல்கிறது. மழைக்காலங்களில் பரமசிவன் மலையடிவாரத்திலிருந்து வருகின்ற காட்டாறு வெள்ளம், இந்த வஞ்சி ஓடையை நிரப்பி கொட்டகுடி ஆற்று வழியாக கடக்கும். இந்த ஓடையால் காட்டாறு வெள்ளம் 70 சதவீதம் வரை ஊருக்குள் புகாமல் பாதுகாப்பான சூழ்நிலையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஓடையின் இருபுறங்களிலும் மண்கரைகள் பலமிழந்து இருபாலங்கள் பழுதாகி ஆபத்தான சூழல் உருவானது. இதுகுறித்து பொதுமக்கள் புகாரின்பேரில், குப்பிநாயக்கன்பட்டியிலிருந்து ரயில்வே கிராஸ் மெயின் ரோடு வரை ரூ.6.50 கோடிக்கு டெண்டர் எடுக்கப்பட்டு, இருபுறங்களிலும் உள்ள கரைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு கான்கிரீட் தடுப்புச் சுவர்களாக கட்டப்பட்டு புது பாலங்கள் அமைக்கும் பணிகள், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடந்து வருகிறது.

இதில் இருபுறங்களிலும் கரைகள் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டது.இந்நிலையில், நேற்று பெய்த கனமழையின் காரணமாக குப்பிநாயக்கன்பட்டியிலிருந்து, ஓபிஎஸ் அலுவலகம் திரும்பும் இடம் வரையில் கான்கிரீட் தடுப்புச் சுவர் இடிந்து சரிந்து விழுந்து விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியல் விடப்பட்ட டெண்டரை ஏலம் எடுத்தவர் தரமில்லாமல் கட்டியுள்ளார். தரமற்ற பணிகளால் சில நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் சுவர் சரிந்து விட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் டெண்டர் எடுத்து பணிகள் செய்பவர்களிடம் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: