தகுதியில்லாத கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க லஞ்சம்!: சேலம் பெரியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு..!!

சேலம்: ஊழல் புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் தந்தை பெரியாரின் நினைவாக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூர் பகுதியில் பெரியார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை ஒன்றிணைத்து இந்த பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.

இந்த பல்கலையில் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடு மற்றும் மோசடி புகார்கள் அடுத்தடுத்து எழுந்து வந்தது. குறிப்பாக, பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 154 தகுதியற்ற நபர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2014 முதல் 2017 வரை பெரியார் பல்கலை துணைவேந்தராக சாமிநாதன் இருந்தபோது பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக லஞ்சஒழிப்புத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகுதியற்ற நபர்களை தேர்வு செய்யும்படி தேர்வுக்குழுவை சாமிநாதன் மிரட்டி கையெழுத்து பெற்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. தேர்வுக்குழுவுக்கே தெரியாமல் சில நியமனங்களை துணைவேந்தராக இருந்த சாமிநாதன் செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சாமிநாதன் பதவிக்காலத்தில் பெரும்பாலான பணி நியமனங்கள் அவசரகதியில் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் லீலா நியமனத்தில் முறைகேடு நடந்ததும் கண்டறியப்பட்டிருக்கிறது. பேராசிரியர்கள் லட்சமி மகோகரி, வெங்கடாசலம், முருகேசன் நியமனங்களிலும் முறைகேடு என புகார் எழுந்துள்ளது.

பேராசிரியர்கள், பணியாளர்கள் நியமங்களுக்கு துணைவேந்தராக இருந்த சாமிநாதன் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதும் அம்பலமாகியுள்ளது. தகுதியான நபர்கள் மற்றும் அரசாங்கத்தை ஏமாற்றி சாமிநாதன் முறைகேடு செய்ததாக லஞ்சஒழிப்புத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது. பெரியார் பல்கலை. துணைவேந்தராக சாமிநாதன் இருந்த போது பல்வேறு முறைகேடு நடந்ததாக அதிமுக ஆட்சியிலேயே புகார் எழுந்தது. ஆனால் அப்போது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் தற்போது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. தகுதியில்லாத கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்க லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதி அளித்ததாக சேலம் பெரியார் பல்கலை.

முன்னாள் துணைவேந்தர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் புதிய பாட பிரிவுகள் தொடங்க அனுமதி கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எருமைப்பட்டி ஈ.ஆர்.கே. கல்லூரியில் பி.காம், எம்.எஸ்.சி. வேதியியல், எம்.காம் உள்ளிட்ட படிப்புகள் தொடங்க அனுமதி தந்துள்ளனர். பி.எஸ்.டி. தாவரவியல், எம்.ஏ.தமிழ், எம்.எஸ்.சி. இயற்பியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் லஞ்சம் வாங்கிக்கொண்டு சாமிநாதன் அனுமதி கொடுத்துள்ளார். சேலம் மேச்சேர பாலா முருகன் கலை, அறிவியல் கல்லூரியும் பல பாடப்பிரிவுகள் தொடங்க லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: