பதவி விலகுகிறாரா ஒன்றிய இணை அமைச்சர்?.. பரபரப்பான அரசியல் சூழலில் அமித்ஷாவுடன் அஜய் மிஸ்ரா சந்திப்பு

டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த 3ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது சாலையில் நடந்து சென்ற விவசாயிகள் கூட்டத்தில், பாஜ.வினரின் கார் தாறுமாறாக ஓடி பலர் மீது மோதியது. இதில் 4 விவசாயிகள் பலியாயினர். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கி உள்ளது.

உ.பி.யின் லக்கிம்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றதாக ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது ஆஷிஷ் மிஸ்ரா துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகன் வழக்கில் சிக்கியுள்ள நிலையில் ஒன்றிய இணையமைச்சராக உள்ள அஜய் மிஸ்ரா பதவி விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

லக்கிம்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்றிய அமைச்சர் பதவி விலகி வலியுறுத்தி வருவதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories: