அரசியல் செய்யவில்லை; நியாயம் தான் கேட்கிறோம்: நான் லக்கிம்பூர் செல்வதை தடுக்க முடியாது.. டெல்லியில் ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; லக்கிம்பூர் வன்முறையில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரின் மகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லக்னோ சென்ற பிரதமர் மோடி, லக்கிம்பூர் சென்று விவசாயிகளை சந்திக்கவில்லை. விவசாயிகள் மீது ஜீப்பை ஏற்றி நசுக்கி கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். கொல்லப்பட்ட விவசாயிகளின் பிரேத பரிசோதனை முறையாக நடத்தப்படவில்லை. நம் நாட்டு விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல் இது என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர்; அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரிக்கிறது. நான் லக்கிம்பூர் செல்வதை தடுக்க முடியாது. லக்கிம்பூர் சென்று விவசாயிகளை சந்திக்க முயற்சிப்பேன். சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் மாநில முதல்வர்களுடன் லக்கிம்பூர் செல்வேன். 144 தடை அமலில் உள்ளதால் 5 பேர் செல்ல முடியாது; நாங்கள் 3 பேர் செல்வோம். சர்வாதிகார போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு ஜனநாயக முறையில் நடந்துகொள்ள வேண்டும். இந்திய விவசாயிகளை ஒன்றிய அரசும், உ.பி.அரசும் அவமதிக்கிறது.

விவசாயிகளின் பலத்தை ஒன்றிய, மாநில அரசுகள் உணர்ந்து கொள்ளவில்லை. என்னையும் என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால் தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை; இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம் தான் கேட்கிறோம். ஜனநாயக முறையிலான போராட்டங்களை ஒடுக்குவதற்கு ஒரு எல்லை உள்ளது. ஒடுக்குமுறை தீவிரமடைந்தால் ஆட்சியாளர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரும் கிளர்ச்சி வெடிக்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: