காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை திறப்பு: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கண்ணாடி அறை நேற்று திறக்கப்பட்டது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 1961ம் ஆண்டு கண்ணாடி அறை புதிதாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2006ம் ஆண்டில், அந்த அறை பழுது பார்க்கப்பட்டது. அப்போது, கண்ணாடிகளின் பாதரசமும் அதிலிருந்த மரக்குச்சிகளும் செல்லரித்து போனது. இதனால் பெருமாளின் பக்தர்களில் ஒருவரான தாமல் எஸ்.நாராயணன் என்பவர் ரூ.10 லட்சம் மதிப்பில் முழுவதுமாக திருப்பணி செய்து கண்ணாடி அறையை புதுப்பித்தார்.

இதற்கான திறப்பு விழா கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் முன்னிலையில் நேற்று நடந்தது. புதிதாக திறக்கப்பட்ட கண்ணாடி அறையில் உற்சவர் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. கோயில் அர்ச்சகர்கள் ஸ்தானீகர்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அர்ச்சனை செய்தனர்.

புதுப்பிக்கப்பட்டகண்ணாடி அறையில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தினமும் காலையில் பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிஷேகமும் மாலையில் பெருமாளும் தாயாரும் கோயிலின் உட்பிரகாரத்தில் திருவீதியுலா வரவுள்ளனர்.

Related Stories: