10 ஆண்டுகளாக போராடிய 45 இருளர் குடும்பத்துக்கு வீட்டு மனை பட்டா: அமைச்சர் ஆவடி நாசர் வழங்கினார்

திருத்தணி: கடந்த 10 ஆண்டாக வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி போராடி வந்த 45 இருளர் குடும்பத்தினருக்கு நேற்று அமைச்சர் ஆவடி நாசர் பட்டாக்களை வழங்கினார். திருத்தணி ஒன்றியம் வீரகநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட பகத்சிங் நகரை சேர்ந்த இருளர் காலனி மக்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று பகத்சிங் நகரில் வசிக்கும் 45 இருளர் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது. முன்னதாக திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சத்யா வரவேற்றார். இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் பங்கேற்று 45 இருளர் குடும்பத்தினருக்கு பட்டாக்கள் வழங்கினார்.

அப்போது, அவர்களிடம், `அடுத்த ஆண்டிற்குள் உங்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து, அதை நானே திறந்து வைப்பேன்,’ என உறுதி அளித்தார். இதேபோல், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் நடந்த மெகா தடுப்பூசி முகாமை அமைச்சர் ஆவடி நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், தாசில்தார் ஜெயராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, வட்டார மருத்துவ அலுவலர் சந்திரன் மற்றும் திருத்தணி முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் பூபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: