செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.42 கோடி தடுப்பூசிகள்: கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1.42 கோடி தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மார்பக பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: உலக மார்பகப் புற்றுநோய் வாரத்தை முன்னிட்டு அக்டோபர் முழுவதும் ‘பிங்க் அக்டோபர்’ என்ற முகாம்கள் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் நடைபெற உள்ளது.

புற்றுநோய்க்கு மிக முக்கியத்துவம் கொடுத்து புற்றுநோயை உற்று நோக்குவோம் என்ற அறிவிப்பு 110 விதியின் கீழ் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 60 வயதை கடந்த சிகிச்சைக்காக வருபவர்களுக்கு புற்றுநோய் தொடர்பான பரிசோதனை செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1250 மருத்துவ முகாம்கள்  நடைபெற உள்ளது. அங்கு புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழக அரசிடம் தற்போது 24,98,365 லட்சம் தடுப்பூசிகள்  கையிருப்பில் உள்ளன. தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்த உள்ளோம்.

செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 1.42 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கூடுதல் தடுப்பூசிகளை ஒன்றிய அரசிடம் கேட்டுள்ளோம். 1,23,9370 தடுப்பூசிகள் மத்திய அரசு நமது மாநிலத்திற்கு வழங்க உள்ளது. அதன் முதல் தவணையாக 8 லட்சம் தடுப்பூசிகள் இன்று மாலை வர உள்ளது. தடுப்பூசிக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் தாராளமாக வந்து போட்டுக் கொள்ளலாம். 60 வயதை தாண்டியவர்கள் சர்க்கரை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயன் அடைகின்றனர். ஆயினும் அவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா நோய்தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது குறித்து முதல்வரிடம்  ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: