ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நாளை நடக்குது கிராமசபை-வாட்ஸ் அப், பேஸ்புக், நேரில் பொதுமக்களுக்கு அழைப்பு

சிவகாசி : ஒன்றரை வருடங்களுக்கு பிறகு நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்க கிராம மக்கள் ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில் பேஸ்புக், வாட்ஸ் அப், நேரில் சென்று கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சிமன்ற தலைவர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.கொரோனா பரவல் காரணமாக, ஒன்றரை ஆண்டுக்கு பிறகு, காந்தி ஜெயந்தியான நாளை (அக்.2) கிராமசபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடக்கும் ஊராட்சிகளை தவிர மற்ற பகுதிகளில், கிராமசபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மதுரை மாவட்டம் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கின்றார். கிராமசபை கூட்டங்கள், கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடத்த வேண்டும் என ஊராட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும். கழிப்பறை கட்டி பயன்படுத்தும் உட்பட 22 விதமான விவாதிக்கப்பட வேண்டிய பொருட்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி ஒன்றியத்திலுள்ள 54 ஊராட்சிகளில் தேர்தல் நடைபெறும் 6 ஊராட்சிகள் தவிற 48 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. கிராமசபை கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்று ஒவ்வொரு ஊராட்சிமன்ற தலைவர்களும் வாட்ஸ் அப், பேஸ்புக் உட்பட சமூக வலைதனங்கள் மூலமாகவும் கிராம மக்களை நேரடியாக

சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஊராட்சி மன்ற தலைவருடன் துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு ஊராட்சிகள் நிர்வாக ரீதியாக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நாளை நடைபெறும் ஒருசில கிராம சபை கூட்டங்களில் இந்த கருத்து வேறுபாடுகளை கலைந்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: