நெல்லை கிராமங்களில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் சைக்கிளில் சென்று எஸ்.பி. ஆய்வு

நெல்லை : நெல்லை அருகேயுள்ள கிராமங்களில் இரு பிரிவினருக்கு இடையேயான மோதலை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நெல்லை எஸ்பி மணிவண்ணன் கடந்த இரு நாட்களாக இரவில் சைக்கிளில் சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார்.நெல்லை அடுத்த முன்னீர்பள்ளம் அருகேயுள்ள கோபாலசமுத்திரத்தில் கடந்த 2012-2013ம் ஆண்டுகளில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகள் எதிரொலியாக 8 ஆண்டுகளுக்கு பின்பு முன்னீர்பள்ளம் அருகேயுள்ள வடுவூர்பட்டியில் கடந்த 13ம் தேதி கீழச்செவல் நயினார்குளத்தை சேர்ந்த சங்கரசுப்பிரமணியனும், கடந்த 15ம் தேதி செங்குளத்தில் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன் (37) ஆகியோரும் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த இரு கொலை வழக்குகளில் முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி தலா 12 பேர் வீதம் 24 பேரை கைது செய்தனர். இந்த இரு கொலைகள் தொடர்பாக முன்னீர்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விருதுநகர், தேனி, திருப்பூர், குமரி, தென்காசி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 3 வாரங்களாக பாதுகாப்பு பணியில் 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல கிராமங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் அரிவாள், வாள், கத்தி தயாரிக்கும் இரும்புப் பட்டறைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் பட்டறைகளில் சிசிடிவி காமிரா அமைக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் அபிநபு, நெல்லை எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் பகலிலும், இரவிலும் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தினமும் ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாக நெல்லை எஸ்பி மணிவண்ணன் காலை, மாலை, நள்ளிரவு வேலைகளில் முன்னீர்பள்ளம் உள்ளிட்ட பல கிராமங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். கடந்த இரு நாட்களாக எஸ்பி மணிவண்ணன் இரவில் போலீசாருடன் முன்னீர்பள்ளம், பத்தமடை, மேலச்செவல், பிரான்சேரி மற்றும் கோபாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று விடிய விடிய ஆய்வு நடத்தி வருகிறார்.

Related Stories: