தென் மண்டலத்தில் முன் மாதிரியாக மாறும் குமரி காவல்துறைக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் மேம்படுத்த நடவடிக்கை: எஸ்.பி. பத்ரி நாராயணன் தகவல்

ஆரல்வாய்மொழி : குமரி மாவட்ட காவல்துறைக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் தென் மண்டலத்தில் முன் மாதிரியான பயிற்சி தளமாக மாற்றப்படும் என எஸ்.பி. பத்ரி நாராயணன் கூறினார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் போலீசார் பயிற்சிக்காக வந்து செல்கிறார்கள். மேலும் வருடாந்திர துப்பாக்கி சுடுதல் போட்டிகளும் நடைபெறும். இந்த பயிற்சி தளம் முறையாக சீரமைக்கப்படாத நிலையில் இருந்தது. எந்த வித கட்டிட வசதிகளும் இல்லாததால், பயிற்சிக்காக வரும் போலீசார் பெரும் சிரமத்தை சந்தித்தனர். மழை பெய்தால் கூட ஒதுங்கி நிற்க முடியாத நிலை இருந்தது.இந்த நிலையில் கடந்த  சில மாதங்களுக்கு முன், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை பார்வையிட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், இங்கு போலீசாருக்கான அடிப்படை வசதிகளை செய்ய நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி தனியார் நிறுவன பங்களிப்புடன் இந்த பயிற்சி தளம் புதுப்பிப்பு மற்றும் கட்டிடம் கட்டும் பணிகள் நடந்தன.

தற்போது இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, புதுப்பிக்கப்பட்ட துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை நேற்று (28ம்தேதி) எஸ்.பி. பத்ரி நாராயணன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், தென் மண்டலத்தில் மதுரை, தூத்துக்குடி (வல்லநாடு), ஆரல்வாய்மொழி ஆகிய 3 இடங்களில் தான், துப்பாக்கி சுடும் தளம் உள்ளது. நான், இந்த மாவட்டத்துக்கு எஸ்.பி.யாக வந்ததும், துப்பாக்கி சுடும் தளத்துக்கு வந்து பார்வையிட்டேன். புதர் மண்டிய நிலையில் எந்த வித அடிப்படை வசதி கூட இல்லாமல் இருந்தது.இந்த துப்பாக்கி சுடும் தளத்தை மேம்படுத்த வேண்டும் என முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தான், ராம்கோ நிறுவனத்தினர் இதற்கான பணிகளை செய்ய முன் வந்து, துப்பாக்கி சுடும் தளத்தை சீரமைத்து கட்டிடம், போர்வெல், மின்சார வசதி செய்து கொடுத்துள்ளனர். இந்த துப்பாக்கி சுடும் தளம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். தென் மண்டலத்தில் சிறந்த, முன் மாதிரியான துப்பாக்கி சுடும் தளமாக இதை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தீவிரமாக பணியாற்றிய போலீசாருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஏடிஎஸ்பி சுந்தரம், டி.எஸ்.பி. சாம் வேத மாணிக்கம், இன்ஸ்பெக்டர்கள் பெர்னார்டு சேவியர் (தனிப்பிரிவு) கண்ணன் (நக்சல் ஒழிப்பு படை), முத்துராஜ் மற்றும் எஸ்.ஐ.க்கள் சுபாஷ், ரகு பாலாஜி, சம்சீர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: