கூடலூரில் இன்று 5வது நாளாக தொடரும் வேட்டை வனத்துறைக்கு சவால் விடும் ஆட்கொல்லி புலி

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 24ம் தேதி தோட்ட தொழிலாளியை புலி அடித்து கொன்றது. இதையடுத்து, புலியை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. இந்நிலையில், புலிக்கு மயங்க ஊசி செலுத்தும் நடவடிக்கை நேற்று 4வது நாளாக நடந்தது. 26ம் தேதி மதியம் வனத்துறையினர் கண்ணில் புலி சிக்கியது. மயக்க ஊசி செலுத்த முயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் உரமியபடியே வனப்பகுதிக்குள் சென்று மாயமானது. அப்போது, பலத்த மழை பெய்ததால் புலியை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை மீண்டும் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் இரண்டு இணை இயக்குனர்கள், கூடலூர் கோட்ட வன அலுவலர், 3 கால்நடை மருத்துவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து வயநாடு கோட்டவன அலுவலர் நரேந்திர பாபு தலைமையில் வரவழைக்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சி பெற்ற 10 வனத்துறையினர் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளாவில் இருந்து வந்துள்ள சிறப்புப் பயிற்சி பெற்ற வனத்துறையினர் புலியின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் கவச உடைகளுடன் புலியை தேடி, மயக்க ஊசி போட்டு பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புலியை விரைவாக பிடித்துவிட முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், புலியை பிடிக்கும் பணியால் தேவன் மற்றும் மேபீல்டு தோட்ட தொழிலாளர்களுக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதே பசு மாட்டை புலி அடித்துக்கொன்றது. வனத்துறையினர் அருகே வந்து தப்பியது அவர்களுக்கு சாவல்விடுவதுபோன்று இருந்தது. இன்று 5வது நாளாக புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: