அலைச்சல் இல்லாமல் ஆதார் திருத்தம் நடக்குமா?திருச்சுழி மக்கள் எதிர்பார்ப்பு

திருச்சுழி : திருச்சுழி தாலுகாவிற்குட்பட்ட சுமார் 148க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் புதிய ஆதார் எடுக்கவும், அவற்றில் உள்ள தவறுகளைத் திருத்தவும், திருச்சுழி தாலுகா அலுவலகத்திலுள்ள இ-சேவை மையத்திற்கு வரவேண்டிய சூழல் உள்ளது. தற்போது 5 வயது நிரம்பிய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதாரில் உள்ள புகைப்படம் மற்றும் புதிய கைரேகை பதிக்க வேண்டியுள்ளதால் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

தினந்தோறும் 50க்கும் மேற்பட்டோர் வெகு தொலைவில் இருந்து ஆதார் திருத்தத்திற்காக வந்தும் இணையதளம் சரியாக செயல்படவில்லையென கூறி பலமுறை திருப்பி அனுப்புகின்றனர். மேலும் நாள் ஒன்று 25 பேருக்கு மட்டுமே ஆதார் திருத்தம் செய்கின்றனர். இதனால் வெகு தொலைவிலுள்ள மக்கள் காலை 8 மணிக்கே தாலுகா அலுவலகத்திலுள்ள இசேவை மையத்திற்கு முன்பாக தங்கள் குழந்தைகளுடன் காத்து கிடக்கின்றனர். இணையதள சேவை துரிதபடுத்தி மக்களை அலைக்கழிக்காமல் ஆதார் திருத்தம் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அத்திகுளத்தைச் சேர்ந்த கருப்பையா கூறுகையில், எங்கள் கிராமப்பகுதியிலிருந்து ஆதார் திருத்தத்திற்காக நான்கு முறை திருச்சுழி தாலுகா அலுவலகத்திற்கு வருகிறேன்.

வரும்போதெல்லாம் இணையதளம் செயல்படவில்லையென திரும்ப அனுப்புகின்றனர். இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறேன் என கூறினார்.

Related Stories: