நடப்பு ஆண்டிலேயே பச்சையாறு அணை திட்டம் அறிவிப்பு வரும்-செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி

பழநி : பச்சையாறு அணைத்திட்டம் இந்த ஆண்டிலேயே அறிவிக்கப்படுமென ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ உறுதி அளித்துள்ளார். தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் பழநி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிபட்டி ஊராட்சித் தலைவர் செல்லச்சாமி மற்றும் 12வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் இறந்ததால் இப்பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதில் ஆண்டிபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட செங்காளியப்பன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 12வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் ராமராஜ் போட்டியிடுகிறார்.

பழநி அருகே ஆண்டிபட்டியில் ஒன்றியக்குழு உறுப்பினர் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ பேசியதாவது,‘‘ஆண்டிபட்டி மண்திட்டு அருகில் உள்ள ரங்கநாதன் குளத்தில் நீரை தேக்குவதற்கேற்ப ஆழப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜேஜே நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டா வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு எஸ்டி சாதிச்சான்று கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சின்னம்மாபட்டியில் குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சி வந்த 142 நாளில் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ரூ.600 கோடியில் உருவாகும் ஆழியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் கிராமங்களின் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இந்த ஆண்டிலேயே பழநி பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான பச்சையாறு அணைக்கான அறிவிப்பு வெளிவருமென தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக பழநி சட்டமன்ற தொகுதியில் 52 டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட உள்ளன.

நரிப்பாறைக்கு நகரும் ரேசன் கடை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். திமுக களப்பணியாளர்கள் நமது சாதனைகளை மக்களிடம் எடுத்துச்சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பழநி யூனியன் தலைவர் ஈஸ்வரி கருப்புச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சௌந்திரபாண்டியன், சாமிநாதன், நகரச் செயலாளர் தமிழ்மணி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுமணி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர இளைஞரணி அமைப்பாளர் லோகநாதன், மாவட்ட நெசவாளரணி அமைப்பாளர் சோ.காளிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: