ஆற்காடு அருகே சுகாதாரத்துறை சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரம்-30 பேர் குழுவினர் வீடு வீடாக பரிசோதனை

ஆற்காடு : ஆற்காடு அருகே சுகாதாரத்துறை  சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 30 பேர் கொண்ட குழுவினர் வீடுவீடாக சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த தாஜ்புராவில் புதுப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு ஒழிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சத்யநாராயணன், அருண்குமார், ரவிக்குமார்,ந வீன்குமார்  ஆகியோர் கலந்து கொண்டு சுகாதார குழுவினர் மேற்கொள்ளவேண்டிய டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

இந்த பணியில் 30 பேர் கொண்ட குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுப்புழுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீடுகளின் அருகே தண்ணீர் தேங்கி உள்ளதையும்,  தேவையற்ற பொருட்கள் இருப்பதையும் அப்புறப்படுத்தினார்கள். அதேபோல் வீடு வீடாக சென்று தொட்டிகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழு ஒழிப்பு மருந்தினை தெளித்து, கிருமி நாசினி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.

இந்த பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் பாபுராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  செய்து ஆலோசனைகளை வழங்கினார். மேலும் கொரோனா தொற்று  பரவல் குறித்தும்,  அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Related Stories: