கரூர் மாவட்டத்தில் 624 இடங்களில் கொரோனா தடுப்பூசி 3ம் கட்ட முகாம்-குலுக்கல் முறையில் தேர்வு செய்பவர்களுக்கு பரிசு

கரூர் : கரூர் மாவட்டம் முழுவதும் 624 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் மூன்றாம் கட்ட முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது. காலை 7மணி முதல் இரவு 7மணி வரை இந்த முகாம்கள் நடைபெற்றது.கரூர் நகராட்சிக்குட்பட்ட குமரன்நடுநிலைப்பள்ளி, பிரபஞ்சன் தொடக்கப்பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளிலும், கரூர் வட்டார வளர்ச்சி அலுவலகம், அருகம்பாளையம் பஞ்சமாதேவி, நெரூர், புதுப்பாளையம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கரூர் மாவட்டம் முழுவதும் அரவக்குறிச்சி தொகுதியில் 165 இடங்களிலும், கரூர் தொகுதியில் 96 இடங்களிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 196 இடங்களிலும், குளித்தலை தொகுதியில் 162 இடங்களிலும், 5 நடமாடும் முகாம்கள் என 624 இடங்களில் முகாம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை பார்வையிட்ட கலெக்டர், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று, தடுப்பூசி குறித்து எடுத்துக்கூறி அழைப்பு விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், நேற்றைய முகாமில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குலுக்கலுக்கான கூப்பன்கள் வழங்கப்பட்டு அவர்களது விபரங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஒரு பெட்டியில் போடப்பட்டது. அவற்றில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) கவிதா, குளித்தலை கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி உட்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் மற்றும் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிகளில் கலெக்டர் பிரபுசங்கர் கொரோனா தடுப்பூசி முகாமின் ஆய்வின் போது வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதின் பயன்பாடுகளை எடுத்துக்கூறினார்.கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவக்குளம் அரசு நடுநிலைப்பள்ளி பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களை கலெக்டர் பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டார்.

அங்கிருந்து வீடு வீடாக சென்று தடுப்பூசியின் பயன்பாடுகளை மக்களிடையே எடுத்துக்கூறி தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார். அதன்பின் பழையஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட புதுப்பட்டியில் வீடுவீடாக சென்று வயதான முதியோர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்வதின் அவசியங்களை கலெக்டர் நேரில் எடுத்துக்கூறி அவர்களின் சம்மதத்துடன் தடுப்பூசி போடப்பட்டது. கலெக்டர் கூறியதை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்தார். தடுப்பூசி முகாமில் பணியாற்றிய செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். ஆய்வின் போது ஆர்டிஓ(பொ) தட்சிணாமூர்த்தி, தாசில்தார் வெங்கடேசன், செயல் அலுவலர்கள் யுவராணி, ராஜகோபால் மற்றும் வருவாய் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தோகைமலை: தோகைமலை ஒன்றியங்களில் உள்ள சின்னையம்பாளையம், கழுகூர், நாகனூர், பொருந்தலூர்;, தோகைமலை, பாதிரிபட்டி, கல்லடை, கூடலூர், கள்ளை, புத்தூர், வடசேரி, பில்லூர், புழுதேரி, ஆர்.டிமலை, ஆர்ச்சம்பட்டி, ஆலத்தூர், தளிஞ்சி, நெய்தலூர், சேப்ளாப்பட்டி, முதலைபட்டி ஆகிய 20 ஊராட்சிகளில் 56 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டது. முகாம்களில் மக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேபோல் சுகாதார பணியாளர்கள், ஒன்றிய பணியாளர்கள் வீடு, வீடாக சென்று வயது முதியோர், மாற்றுதிறனாளிகள் என மொத்தம் 2,626 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை நேற்று கரூர் கலெக்டர் பிரபு சங்கர்,நாகனூர் ஊராட்சியில் திடீர் ஆய்வு செய்தார்.

குளித்தலை:குளித்தலை நகராட்சி பகுதியில் மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் மணதட்டை, கடம்பர் கோயில், மாரியம்மன் கோயில், ஆர்சி அமல ராகினி ஆகிய அரசு நடுநிலைப்பள்ளி, சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி, அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது. இதில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமானோர் வந்திருந்தனர்.

Related Stories:

>