கடல் கடந்து கல்வி கற்கும் கனவில் மண் வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு: 5.9 லட்சமாக இருந்தது; 2.6 லட்சமாக குறைந்தது

புதுடெல்லி: வெளிநாடு சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு கடந்தாண்டு 2.6 லட்சமாக குறைந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று படிப்பது ஏராளமான இந்திய மாணவர்களின் கனவாக இருந்து வருகிறது. கடல் கடந்து சென்று படிக்க வேண்டும் என்ற இவர்களின் கனவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் மண்ணை போட்டுள்ளது. கடந்த 2019ல் வெளிநாடு சென்று படித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 5.9 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்தாண்டில் இது 2.6 லட்சமாக குறைந்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டு கல்வி நிலையங்களில் சேர்க்கை பெற்று விட்டு, இந்தியாவில் இருந்து ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று வருகின்றனர்.

கடந்தாண்டு முதல் 6 மாதங்களுக்கு இந்தியாவில் ஊரடங்கு, கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததாலும், வெளிநாடுகளும் விமான பயணத்துக்கு தடை விதித்து இருந்ததாலும், இந்த எண்ணிக்கை குறைய காரணமாகி விட்டது. வழக்கமாக, ஆண்டுதோறும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கும். இதற்கு அடுத்த இடங்களில் ஆந்திரா, பஞ்சாப் மாணவர்கள் இருப்பார்கள். தற்போது, இந்த மாநிலங்களிலும் இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது. இந்தாண்டின் முதல் 2 மாதங்களில் 71 ஆயிரத்து 769 மாணவர்கள் மட்டுமே வெளிநாடு சென்று படிப்பதற்கான விசா பெற்றுள்ளனர். இதில், 11 ஆயிரத்து 790 பேர் ஆந்திராவையும், 10 ஆயிரத்து 166 பேர் மகாராஷ்டிராவையும் சேர்ந்தவர்கள் என்று இந்திய குடியமர்வு பிரிவின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, உலகளவில் கொரோனா ஊரடங்குகள் தளர்த்தப்பட்டு, விமானங்கள் இயக்கப்படுவது தொடங்கி இருக்கிறது. மேலும், கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளிநாடு செல்வதற்கான விசா பெறும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, விமான தடைகளை நீக்கியுள்ள இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளுக்கு இவர்கள் செல்லக் கூடும். ஆஸ்திரேலியாவில் பிப்ரவரியில் இருந்து கல்வியாண்டு தொடங்குகிறது. இதனால், இந்த நாட்டுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வரும் நவம்பர், டிசம்பரில் அதிகரிக்கும் என கருதப்படுகிறது.

மகாராஷ்டிரா, ஆந்திராவில் சரிவு

வெளிநாட்டில் கல்வி கற்க அதிக மாணவர்கள் செல்லும் 5 முக்கிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட விசா எண்ணிக்கை விவரங்கள் வருமாறு:

* வெளிநாடு சென்று படித்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 2016ல் 3 லட்சத்து 70 ஆயிரமாக இருந்தது.

* அடுத்த மூன்று ஆண்டுகளில், அதாவது 2019ல் இந்த எண்ணிக்கை 5 லட்சத்து 90 ஆயிரமாக அதிகரித்தது.

* 2020ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2.6 லட்சமாக குறைந்து விட்டது

மாநிலம்/

ஆண்டு    2016    2017    2018    2019    2020    2021

(பிப். வரை)

மகாராஷ்டிரா    45,560    56,640    58,850    64,653    29,079    10,166

ஆந்திரா    46,818    56,093    62,771    69,465    56,144    11,790

பஞ்சாப்    36,743    52,160    60,331    73,574    33,412    5,791

குஜராத்    24,775    33,751    41,413    48,051    23,156    6,383

கேரளா    18,428    22,093    26,456    30,948    15,277    5,049

நாடு முழுவதும் மொத்தம்    3,71,506    4,56,823    5,20,342    5,88,931    2,61,406    71,769

Related Stories: