எல்லையை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 38 பேர் மீன்வளத்துறையிடம் ஒப்படைப்பு

நாகை: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதை தடுக்கவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை கண்காணித்து தடுக்கவும் இந்திய கடலோர பாதுகாப்பு படையால் ஆபரேசன் அவ்ரோத் என்ற பெயரில் நேற்றுமுன்தினம் முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று, இந்திய கடல் எல்லையை தாண்டி தமிழக மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழக மீனவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை, சாமந்தான்பேட்டை, நாகூர்பட்டினச்சேரி ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் என தெரியவந்தது.

இதையடுத்து 4 விசைப்படகுகளில் உள்ள 38 மீனவர்களையும், 4 விசைப்படகுகளையும் காரைக்கால் தனியார் துறைமுகம் அழைத்து வந்தனர். இதுதொடர்பாக கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் நாகை கடலோர பாதுகாப்பு குழும ஏடிஎஸ்பி ரமேஷ்கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜா, மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் தனியார் துறைமுகம் சென்று அங்கிருந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக நாகை மீன்வளத்துறையிடம் 38 மீனவர்களும் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Stories: