செவ்வல் விலையேற்றத்தால் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் முடக்கம்

கம்பம்: செவ்வல் விலையேற்றத்தால் தேனி மாவட்டத்தில் செங்கல் சூளை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. செங்கல் மற்றும் மட்பாண்டங்கள் தயாரிப்புக்கு செவ்வல் மண் முக்கிய மூலப்பொருளாகும். ஒரு டிப்பர் லாரியில் 3 யூனிட் செவ்வல் மண் அள்ளலாம். 5 ஆண்டுகளுக்கு முன், ஒரு டிப்பர் லாரி செவ்வல் ரூ.ஆயிரத்துக்கு செங்கல் சூளை உரிமையாளர்கள் வாங்கி வந்தனர். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் செங்கல் சூளைகளுக்கு அள்ளப்படும் செவ்வலுக்கான உரிமையை கடந்த அதிமுக ஆட்சியில், அக்கட்சி பிரமுகர் ஒருவர் பெற்றுக் கொண்டார். இதனால், அவர் நிர்ணயித்த விலையில்தான் மாவட்டத்தில் அனைத்து காளவாசல்களுக்கும் செவ்வல் அனுப்பப்படுகிறது. இது குறித்து புகார்களும் கிடப்பில் போடப்பட்டன. செவ்வல் விலையேற்றத்தால் செங்கல் விலையும் உயர்ந்தது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு செங்கல் ரூ.3க்கு விற்பனையானது. தற்போது செவ்வல் விலை உயர்வு, உற்பத்தி செலவு ஆகியவற்றால் ஒரு செங்கல் ரூ.6 முதல் 7 வரை விற்கப்படுகிறது. நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் குறைந்த பட்ஜெட்டில் வீடு கட்டுவதற்கு 20 ஆயிரம் செங்கற்கள் தேவைப்படுகின்றன. முன்பு 20 ஆயிரம் செங்கற்களை ரூ.60 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம். தற்போது மாவட்டம் முழுவதும் செவ்வல் மண்ணை அள்ளும் முற்றுரிமை ஒருவர் மட்டுமே பெற்றிருப்பதால், விலை உயர்ந்து, 20 ஆயிரம் செங்கற்களை வாங்க ரூ.ஒன்றரை லட்சம் வரை தேவைப்படுகிறது. இதனால், நடுத்தர மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு நனவாகவே உள்ளது. இதுதவிர மணல், சிமெண்ட், கம்பி ஆகிய மூலப் பொருட்களும் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து செங்கல் சூளை உரிமையாளர்கள் கூறியதாவது: செங்கல் தயாரிப்புக்கு செவ்வல் மண் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. முன்பு ஒரு டிப்பர் லோடு ரூ.6 ஆயிரமாக இருந்தது. தற்போது ஆண்டிபட்டி பகுதியில் இருந்து வருவதால் ரூ.11 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் தனிநபர் ஒருவரே செவ்வல் அள்ளி விற்பனை செய்யும் உரிமையை பெற்று இருப்பதால், அவர் வைத்ததே விலையாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா பொதுமுடக்கத்தால் கேரளாவுக்கு செங்கல் அனுப்ப முடியவில்லை. இதனால், மாவட்டத்தில் 60 சதவீதம் செங்கல் சூளைகள் மூடப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, செவ்வல் மண் அள்ளும் உரிமையை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>