பெருங்களத்தூரில் பட்டப்பகலில் குடியிருப்பில் நுழைந்த முதலை: வனத்துறையினர் மீட்டனர்

தாம்பரம்: பெருங்களத்தூர் அடுத்துள்ள சதானந்தபுரம் ஏரியில் முதலைகள், விஷ பாம்புகள்அதிகளவில்  உள்ளன.  இந்த ஏரியை சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஏரியில் இருந்து முதலைகள், அவ்வப்போது இரவு நேரங்களில் வெளியே வந்து, வீடுகளில் உள்ள கோழி, வாத்து மற்றும் நாய்களை வேட்டையாடி சாப்பிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவும், சிறுவர், சிறுமிகளை தனியாக அனுப்புவதையும் தவிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக, மழைக்காலங்களில் சதானந்தபுரம் ஏரியில் இருந்து வெளியேறும் முதலைகள், அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நுழைவதும், அவற்றை பொதுமக்கள் பிடித்து வனத்துறையில் ஒப்படைப்பதும் வழக்கம். எனவே, தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள முதலைகளை பிடித்து, வேறு பாதுகாப்பான இடங்களில் விட வேண்டும் என அப்பகுதி மக்கள், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை இந்த ஏரி அருகே வசித்து வரும் விஜயகுமார் வீட்டின் அருகில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, ஒன்றரை அடி நீளமுள்ள முதலை குட்டி ஒன்று, குடியிருப்பு வளாகத்தில் நுழைந்தது. இதை பார்த்து சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சத்தம் கேட்டு அங்கு வந்த விஜயகுமார் மற்றும் அக்கம் பக்கத்தினர் முதலை குட்டியை, பலமணி நேரமாக போராடி, லாவகமாக பிடித்து கோணி பையில் போட்டு பாதுகாப்பாக வைத்தனர்.

பின்னர், வேளச்சேரி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வேளச்சேரி வனத்துறையினர் பிடிபட்ட முதலை குட்டியை பத்திரமாக கொண்டு சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சதானந்தபுரம் ஏரியில் 10 முதலைகளுக்கு மேல் இருக்கலாம். ஒவ்வொன்றும் 7 முதல் 9 அடிக்கு மேல் இருக்கும். இவை அடிக்கடி குடியிருப்புகளில் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. வனத்துறையினரிடம் புகார் செய்தால், தண்ணீர் வற்றிய பின்னர்தான் பிடிக்க முடியும் என்கின்றனர். இதனால் நாங்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகிறோம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: