பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டர் முன் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்-குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு

தஞ்சை : தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் இருக்கைக்கு முன் அமர்ந்து விவசாயிகள் பொது பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று தீர்வு காண அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டார்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரத்தநாடு வட்டம் பூவத்தூர் பஞ்சாயத்து பொட்டலங்குடிகாடு கிராமத்தில் வசிக்கும் விவசாயி திருவேங்கடம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோஷமிட்டப்படி கூட்டத்திற்குள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் இருக்கைக்கு முன்பு அமர்ந்து கோஷமிட்டனர். இ

தையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து கேட்டபோது, திருவேங்கடத்திற்கு சொந்தமான 6 ஏக்கர் நஞ்சை நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நடவு பயிர் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அவரது வயலுக்கு செல்லும் பொது பாதையை சில சமூக விரோதிகள் போலி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கை கோர்த்து பொது பாதையை ஆக்கிரமித்துக் கொண்டு அறுவடைக்கு இயந்திரங்கள் கொண்டு செல்ல முடியாதப்படி தடுத்துவிடட்னர். இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மண்ணோடு சாய்ந்து முளைத்து மடித்துவிட்டது.

இதனால் ரூ.5 லட்சம் விவசாயி திருவேங்கடத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, தலைமை செயலாளர், மாவட்ட கலெக்டர், வேளாண்துறை அமைச்சர், உணவுத்துறை அமைச்சர் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சக விவசாய சங்க நிர்வாகிகள் சுந்தர விமல்நாதன், ஜீவக்குமார் உள்ளிட்டோர் விவசாயிகளை சமாதானப்படுத்தினர்.

இதற்கிடையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தஞ்சை ஆர்.டி.ஓ. வேலுமணி, ஒரத்தநாடு தாசில்தார் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஆர்.டி.ஓ. தாசில்தார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

குட்டிக்கரணம் அடித்து போராட்டம்

தமிழக விவசாய சங்க தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையிலான விவசாயிகள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே தரையில் உருண்டும், குட்டிக்கரணம் அடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கக்கரை சுகுமாரன் கூறும்போது, 2020-21க்கான பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் பயிருக்கு இன்சூரன்ஸ் செய்து 10 மாதங்களாகியும் இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. விவசாயிகள் அண்டா, குண்டா அடகு வைத்து 2020 டிசம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்த விவசாயிகள் நிலை மிகவும் அவலமாக உள்ளது. பாரத பிரதம மந்திரியின் திட்டத்தில் காப்பீடு செய்ததற்கு தண்டனையாக வாய்கட்டி, முட்டிப்போட்டு கேட்டும் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை. கடைசியாக குட்டிக்கரணம் அடித்து ஒன்றிய அரசிடம் முறையிடுகிறோம். 6 மாதம் ஆகியும் 3 வேளாண் சட்டத்தையும் வாபஸ் வாங்காத ஒன்றிய அரசுக்கு விவசாயிகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம் என்றார்.

Related Stories:

>