மாவட்டத்தில் முதல் முறையாக புதுமாவிளங்கை கிராமத்தில் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், புதுமாவிளங்கை கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், மாவட்டத்தில் முதன் முறையாக நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார். பின்னர் நெல் கொள்முதல் பணிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு பனை விதைகளையும், மானிய விலையில் விவசாய இடுபொருட்களையும் வழங்கினார். பின்னர் நெல்மணிகளின் ஈரப்பதம் 17 சதவிகிதத்திற்கு குறைவாக இருப்பதை ஈரப்பதம் அளவிடும் கருவி மூலம் ஆய்வு செய்து உறுதிப்படுத்தினார். பிறகு நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் குப்புவேல் என்ற விவசாயிடமிருந்து 1150 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது.

அப்போது, கலெக்டர் பேசியதாவது, `மாவட்டத்திலுள்ள 1000 நெல் மூட்டைகளுக்கு மேல் அறுவடை செய்யும் பெரிய விவசாயிகள் மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினை அணுகி முன்பதிவு செய்யலாம். மண்டல மேலாளரால் கள ஆய்வு செய்த பின்னர், இத்திட்டத்தில் தகுதியுடைய விவசாயிகள் நடமாடும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களுடைய நெல் விற்பனையை துவங்கலாம்,’ என தெரிவித்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் காஜா ஷாகுல் அமீது, வேளாண்மை இணை இயக்குநர் சம்பத்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: