திருத்தணி-சோளிங்கர் முக்கிய சாலையை இணைக்கும் ஓடையில் பாதை இல்லாததால் வீடுகட்ட முடியாமல் மக்கள் தவிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டத்துக்கு உட்பட்ட கார்த்திகேயபுரம் ஊராட்சியில் அடங்கிய கன்னிகாபுரம் கிராமத்தில் கடந்த 99ம் ஆண்டு வீடில்லாத ஏழை மக்கள் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்துக்கு திருத்தணி-சோளிங்கர் சாலை வழியாகத்தான் செல்லவேண்டும். இந்த சாலைக்கும் இடத்துக்கும் இடையே பெரிய ஓடை ஒன்று செல்கிறது. இந்த ஓடையை கடந்துதான் கன்னிகாபுரம் பகுதியில் வழங்கப்பட்ட இடத்துக்கு உரிமையாளர்கள் செல்லவேண்டும். வேறு மாற்றுப்பாதை சரியாக இல்லாததால் தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் வீடுகட்ட முடியாமல் ஏழை மக்கள் தவிக்கின்றனர். ஓடை வழியாகவும் செல்லமுடியாததால் பல வருடங்களாக வீடு கட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பாதை வசதி செய்துதரவேண்டும் என்று மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் திருத்தணி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக தெரிகிறது. எனவே, திருத்தணி- சோளிங்கர் செல்லும் மெயின் சாலையில் இருந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு பாதை அமைத்துக்கொடுத்தால் வீடு கட்ட முடியும் என்று என்று பட்டா வைத்துள்ளவர்கள் தெரிவித்தனர்.பொதுமக்கள் கூறுகையில், “திருத்தணி- சோளிங்கர் சாலையில் உள்ள கன்னிகாபுரம் பகுதியில் பல வருடத்துக்கு முன் ஏழை மக்களுக்கு வீடுகட்டி கொள்ள இலவசமாக நிலம் வழங்கினர். அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பட்டா வைத்துள்ளவர்கள் வந்து பார்க்கின்றனர். ஆனால் பாதை இருந்தும் அவற்றை வெட்டி சேதப்படுத்திவிட்டதால் தங்கள் இடத்துக்கு செல்லமுடியாமல் தவிக்கின்றனர். பாதை ஏற்படுத்திகொடுத்தால் உடனடியாக வீடு கட்ட தயாராக உள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

Related Stories: