வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகே மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் : கேரள பல்கலைக்கழகம் அறிவிப்பு!!

திருவனந்தபுரம் : வரதட்சணை வாங்க மாட்டேன் என்று உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகே  மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கொடுமைக்கு இளம் பெண்கள் பலியாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கொல்லத்தை சேர்ந்த விஸ்மயா என்ற மருத்துவ மாணவி வரதட்சணை கொடுமை காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல் அடுத்தடுத்து மேலும் சில பெண்கள் தற்கொலைசெய்து கொண்டனர். இதையடுத்து வரதட்சணை கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. குறிப்பாக கேரள ஆளுநர் ஆரீப் முகம்மது கானும் வரதட்சணை கொடுமைக்கு எதிராக திருவனந்தபுரத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டமும் நடத்தினார்.

அப்போது பேசிய அவர், கல்லூரி மாணவர்கள் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துகொள்ள வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில்  பட்டம் பெறும் மாணவர்கள் அனைவரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்க வேண்டும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உறுதி மொழி பத்திரம் கொடுத்தால் தான் பட்டம் வழங்கப்படும் என்றும் இதை மீறி எதிர்காலத்தில் வரதட்சணை வாங்கினால் அவர்களது பட்டம் ரத்து செய்யப்படும் என்றும் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related Stories: