ஆற்காடு அருகே பாலாற்றில் வெள்ளப்பெருக்கால் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய புதுப்பாடி ஏரியில் அதிகாரிகள் ஆய்வு-360 ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி

ஆற்காடு : ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஏரி 30 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆந்திர மாநிலத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள கலவகுண்டா அணையில் இருந்து 4,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் பாலாற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆற்காடு அடுத்த புதுப்பாடி ஏரிக்கு செல்லும் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரி நீர் கலங்களின் வழியாக வெளியேறி அந்த நீர் கலவை கால்வாயில் செல்கிறது.இதுகுறித்து தகவலறிந்த வேலூர் மேல்பாலாறு வடிநில கோட்ட நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் ஆர்.ரமேஷ்,  ராணிப்பேட்டை மேல்பாலாறு வடிநில உபகோட்ட  நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மா.விஸ்வநாதன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கண்காணிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

அப்போது உதவி பொறியாளர்கள் ஆர்.ராஜேந்திரன், ஆ.சிவசண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், புதுப்பாடி ஏரி 30 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக நிரம்பியதால் 360 ஏக்கர் விளை நிலங்கள் இதன் மூலம் பாசன வசதி பெறுகிறது. மேலும்  வெளியேறும் உபரி நீர்  வீணாகாமல் கலவை கால்வாயில் செல்வதால் 20க்கும் மேற்பட்ட ஏரிகள் இதன் மூலம் நிரம்ப வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நீர்வள ஆதாரத் துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரி கால்வாயில் தண்ணீர் திருப்பியதன் காரணமாக புதுப்பாடி ஏரி விரைவில் முழு கொள்ளளவை அடைந்துள்ளதால், புதுப்பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: