மாவட்டம் முழுவதும் மழைநீர் வடிகால் தூய்மை பணி -விருதுநகரில் கலெக்டர் துவக்கி வைத்தார்

விருதுநகர் : வடகிழக்கு பருவமழையினால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகாமல் தடுக்கும் வகையிலும், மழைநீரில் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாமல் தடுக்கும் வகையில் இடர்பாடுகளை தவிர்த்திட செப்.20 முதல் 25 வரை மழைநீர் வடிகால் தூய்மை பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி பகுதிகளல் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணி நேற்று துவக்கி வைக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சியில் தர்க்காஸ் தெருவில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை ஏஆர்ஆர் சீனிவாசன் எம்எல்ஏ முன்னிலையில் கலெக்டர் மேகநாதரெட்டி துவக்கி வைத்தார்.

கலெக்டர் கூறுகையில், மழைநீர் வடிகால் தூய்மை பணிகள் மூலம் ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள கால்வாய்கள், வடிகால்கள் தூய்மைப்படுத்துவதன் மூலம் வடகிழக்கு பருவமழையில் சாலைகள், தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவது தவிர்க்கப்படும். நீரினால் ஏற்படும் நோய் தொற்று தடுக்கப்படும்’ என்றார். உடன் நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா கமால், தாசில்தார் செந்தில்வேல் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

*வத்திராயிருப்பு பேரூராட்சியில் செயல் அலுவலர் ரவிசங்கர் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் ராமச்சந்திரன், கனகராஜ் மற்றும் தூய்மை பணியாளர்களால் ஒட்டுமொத்த தூய்மை பணி நடைபெற்றது.

*காரியாபட்டி அருகே கல்குறிச்சி, தோணுகால் பகுதிகளில் மழைநீர் வடிகால் தூய்மை பணியினை மாவட்ட திட்ட இயக்குநர் திலகவதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஊரக உதவி இயக்குனர், ஊராட்சிகள் முருகன், பிடிஓக்கள் ராஜசேகரன், சிவக்குமார், ஊராட்சி தலைவர்கள் கல்குறிச்சி கணேசன், தோனுகால் பாலமுருகன், ஊராட்சி செயலர்கள் விஜயராகவன், கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

*ராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கு பகுதியில் உள்ள ஓடையை தூய்மைப்படுத்தும் பணியை எம்எல்ஏ தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள், நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, திமுக நகர பொறுப்பாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

*சிவகாசி பகுதியில் மாஸ் கிளினிங் பணியை ஆணையாளர் துவக்கி வைத்து கூறுகையில், ‘நகராட்சி 33 வார்டுகளில் உள்ள அனைத்து வாறுகால் கழிவுகளும் 6 தினங்களுக்குள் முழுமையாக அகற்றப்பட்டு சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

திருவில்லிபுத்தூரிங் நீரோடைகளை தூய்மை படுத்தும் பணியை நகராட்சி கமிஷனர் மல்லிகா துவக்கி வைத்து ஆய்வு செய்தார். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பழனி, குரு, சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: