நகையே கொடுக்காமல் நகையை அடமானம் வைத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த நகைக்கடன் மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. போலி நகைகள், தரம் குறைந்த நகைகளை அடமானம் வைத்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. நகையே கொடுக்காமல் நகையை அடமானம் வைத்தது போல் கணக்கு காட்டி பல கோடி ரூபாய் கடன் பெற்றும் மோசடி செய்துள்ளனர். சேலம் மாவட்டம் காடையம்பட்டியில் ஒரே நபர் 2.42 கிலோ நகைகளை அடகுவைத்து 384 நகைக்கடன்கள் பெற்று மோசடி செய்துள்ளனர். சேலத்தில் மோசடி செய்த நபரே தருமபுரி மாவட்டம் பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலும் நகைக்கடன் பெற்று மோசடி செய்துள்ளார். சேலம், தருமபுரியில் மட்டுமே ஒரே நபர் ரூ.72.39 லட்சம் நகைக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.

நாமக்கல் மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கவரிங் நகைகளை வைத்து ரூ.11,33,500 கடன்பெற்று மோசடி செய்துள்ளனர். கவரிங் நகைகளை 10 பொட்டலங்களாக அடமானம் வைத்து மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் குமாரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஒரே ஆதார் எண்ணை வைத்து பல பேர் பல லட்சம் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். குமரி மாவட்டம் கீழ்க்குளத்தில் ஒரே நபர் 625 நகைக்கடன் மூலம் ரூ.1.25 கோடி பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ்க்குளத்தில் மற்றொரு நபர் 647 நகைக்கடன் பெற்று ரூ.1.47 கோடி மோசடி செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ்க்குளத்தில் 2 பேருக்கு மட்டுமே ரூ.2.77 கோடி கடன் வழங்கி அதிமுக ஆட்சியில் மோசடி நடந்திருப்பதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சுமார் ரூ.1.98 கோடி மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரும்பூர் கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்ட 500 நகை பொட்டலங்களில் 261 பொட்டலங்களில் நகையே இல்லாததும் அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலையில் 2 குடும்பத்தினர் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.3.64 கோடி கடன் பெற்றது அம்பலமாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் எடுத்தனூர், வானாபுரம், பெரியபட்டு, தண்ராம்பட்டு, பேரையாம்பட்டில் ஒரே குடும்பத்துக்கு 614 நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் மற்றொரு குடும்பத்தினர் 5க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களில் 641 நகைக்கடன்கள் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 குடும்பத்தினருக்கு மட்டும் தள்ளுபடிக்காக 5 சவரன் வீதம் 1,255 நகைக்கடன் பெற்றது அம்பலமாகியுள்ளது.

திருப்பத்தூரில் ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி 3.5 கிலோ தங்க நகைகளை அடமானம் வைத்ததாக ரூ.74 லட்சம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அந்தியோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளை பயன்படுத்தி ரூ.70 லட்சம் நகை மோசடி நடந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைகளின் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி 300 நகைக்கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. பாப்பையாபுரம், சுந்தரலிங்கம் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மோசடி அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபருக்கு 300க்கும் மேற்பட்ட நகைக்கடன் வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குன்றக்குடி தொடக்க வேளாண்மை சங்கத்தில் அந்தியோதையா அன்ன யோஜனா குடும்ப அட்டையை பயன்படுத்தி ரூ.82 லட்சம் கடன் பெற்று மோசடி நடந்துள்ளது. சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் ஒரே நபர் 2.8 கிலோ நகைகளை அடகு வைத்து ரூ.85 லட்சம் கடன் பெற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நகைக்கடன் தள்ளுபடிக்காக நடந்த ஆய்வில் அதிமுக ஆட்சி முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories: