குவாட், ஐநா மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா பயணம்: 24ம் தேதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: குவாட், ஐநா மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்படுகிறார். 4 நாள் பயணமாக செல்லும் அவர், முதல் முறையாக அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபையின் 76வது கூட்டத் தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில், உலக பொதுப் பிரச்னைகள் தொடர்பான விவாதம் நேற்று தொடங்கியது. ஒரு வாரத்திற்கு நடக்க உள்ள இம்மாநாட்டில் பிரதமர் மோடி வரும் 25ம் தேதி உரையாற்ற உள்ளார். இதுதவிர, குவாட் உச்சி மாநாடு வரும் 24ம் தேதி வாஷிங்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றில் பங்கேற்க 4 நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் சிரிங்லா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

* இன்று இரவு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றடையும் பிரதமர் மோடி, அங்கு நடக்கும் கொரோனா தொடர்பான மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

* நாளை காலை அவர், அமெரிக்காவின் பிரபலமான சர்வதேச தொழில் நிறுவன தலைவர்களை சந்தித்து பேசுகிறார். ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் உள்ளிட்டோர் மோடியுடன் பேச உள்ளனர். அதோடு ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் இருதரப்பு உறவுகள், தொழில் ஒத்துழைப்புகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர், குவாட் அமைப்பின் தலைவர்களுக்கு அதிபர் பைடன் தரும் இரவு விருந்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை சந்தித்து பேச உள்ளார்.

* வரும் 24ம் தேதி குவாட் உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இந்த அமைப்பை நிறுவி உள்ளன. சீனாவை எச்சரிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் மாநாட்டில், ராணுவ, கடல் பாதுகாப்பு, முதலீடு, வர்த்தகம் குறித்து 4 நாடுகளின் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

* அதோடு, முதல் முறையாக பிரதமர் மோடி, அதிபர் பைடன் இடையேயான சந்திப்பும் 24ம் தேதி நடக்க உள்ளது. அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு நடக்கும் முதல் சந்திப்பு என்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில் இருதரப்பு உறவுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆப்கான் விவகாரம் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.

* அதைத் தொடர்ந்து, நியூயார்க் செல்லும் பிரதமர் மோடி 25ம் தேதி மாலை 6.30 மணி அளவில் ஐநா பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அன்றிரவு விமானம் மூலம் அவர் டெல்லி திரும்புவார்.

Related Stories: