கே.சி.வீரமணி வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத ரூ.20 லட்சம், கணினிகள் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைப்பு..!!

வேலூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட கணக்கில் வராத 20 லட்சம் ரொக்கம் மற்றும் கணினிகள் வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அதிமுக ஆட்சியில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணியின் வீடுகள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த 16ம் தேதி லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். திருப்பத்தூர், சென்னை, பெங்களூருவில் மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 34 லட்சம் ரூபாய் ரொக்கம், 5 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி மற்றும் 47 கிராம் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அத்துடன் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள், முக்கிய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் வீட்டு வளாகத்தில் சுமார் 550 யூனிட் மணல் பதுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்களுக்கு சரியான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து லஞ்சஒழிப்பு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி முதல் நடவடிக்கையாக வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கணக்கில் வராத 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அத்துடன் மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களையும் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Related Stories: