நெல்லை, தென்காசி உட்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை நிறைவு-கட்டுக்கடங்காத கூட்டத்தால் திணறல்

நெல்லை : நெல்லை, தென்காசி உட்பட 9  மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிகிறது. அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என கட்டுக்கடங்காத கூட்டத்தால் தேர்தல் நடத்தும் அலுவலகங்கள் திணறுகின்றன.தமிழகத்தில்  புதிதாக பிரிக்கப்பட்ட நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை,  திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி  ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக். 6, 9 என இரண்டு  கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15ம் தேதி  தொடங்கியது. கிராம பஞ்சாயத்து தலைவர், கிராம பஞ்சாயத்து  வார்டு உறுப்பினர் பதவிக்கு பலரும் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்து  வருகின்றனர்.

இந்த பதவிகளுக்கான சின்னங்கள், கட்சி அடிப்படையில்  நடத்தப்படாது என்பதால் வேட்புமனுக்கள் ஒவ்வொரு நாளும் குவிந்து வருகின்றன. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் சில நாட்களில் பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு சில சுயேட்சைகள்  மட்டும் மனு தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட பஞ்சாயத்து தேர்தலுக்கும்  வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது.

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதாலும், நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளதாலும் நேற்று அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர்.  யூனியன் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேற்று முதல் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள், அவர்களுக்கு துணையாக வருபவர்களின் வாகனங்கள் என வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

நெல்லை மாவட்டம், மானூர், பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியன்கள் மிகப் பெரியது. பாளையங்கோட்டை யூனியன் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் அதிக கூட்டம் திரண்டதால் யூனியன் அலுவலக கதவுகள் மூடப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் திணறி வருகின்றன.

வேட்பு மனு தாக்கல்,  நாளை (22ம் தேதி) மாலை 5 மணியுடன் முடிகிறது. மாவட்ட பஞ்சாயத்து  உறுப்பினர், பஞ்சாயத்து யூனியன் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, திமுக, அதிமுக, காங்கிரஸ்,  பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இன்றும், நாளையும் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் பலத்த  போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாருக்கு எந்த சின்னம்

வேட்புமனு தாக்கல் நாளை முடியும் நிலையில், 23ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. வேட்புமனுக்களை 25ம் தேதி வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்போது யாருக்கு எந்த சின்னம் என்பது தெரியவரும்.

Related Stories: