நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை வெளியிட்டது தமிழக அரசு..!

சென்னை: நீட் தேர்வால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு என்ற அடிப்படையில் ஒன்றிய அரசு நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது. தமிழகத்தில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் ஏராளமான ஏழை, எளிய மற்றும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மருத்துவ கனவு கானல் நீரானது. இதனால், சில மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் மருத்துவ சீட் கிடைக்காததால் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதைத்தொடர்ந்து நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அரசுக்கு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. நீட் தேர்வு தொடர்பாக பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களின் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த குழுவிடம் 86 ஆயிரம் பேரின் கருத்துகளை பதிவு செய்தனர். பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து நீட் தேர்வு அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில்; அதில், தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% ஆக குறைந்தது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு தொடங்கலாம்.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் அனுமதியை பெறலாம். நீட் ரத்து சட்டம் இயற்றுவது மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்திற்கான சமூக நீதியை உறுதி செய்யும் இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: