மாஜி அமைச்சர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஐகோர்ட் விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் தடை

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்குச் சொத்து சேர்த்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.  ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லையென நீதிபதி ஹேமலதாவும் தீர்ப்பில் தெரிவித்திருந்தனர். மேற்கண்ட இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் முன்பு இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, இரு நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பால் மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆக. 16ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘மூன்றாவது நீதிபதிக்கு வழக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் உத்தரவு உரிய வடிவில் இல்லை’ என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இம்மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், காவாய் அமர்வு முன் விசாரணைக்கு

வந்தது.

அப்போது ராஜேந்திர பாலாஜி தரப்பில், ‘நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை 4 ஆண்டுகள் கழித்து சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது தவறு. உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை. அப்படி இருக்கையில், மூன்றாவது நீதிபதி எப்படி விசாரிக்க முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார். அப்போது நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மற்றபடி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்ைல. விஜிலென்ஸ் தனது விசாரணை தொடரலாம். தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: