மக்கள் நலனுக்கு விரோதமான திட்டங்களை ஒன்றிய அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகம் முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி திமுக தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகிறது. திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் சரி, விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளோம்.

இப்போது ஆளுங்கட்சியாக பின்பு சட்டமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதை டெல்லிக்கு அனுப்பியுள்ளோம். இதுமட்டுமல்ல, காஸ் சிலிண்டர் பிரச்னை உட்பட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காஸ் சிலிண்டர் விலை ரூ.900 ஆக இருந்தது. இப்போது ரூ.950 ஆக உயர்ந்துள்ளது. மாதம் மாதம் ரூ.25 ஏறிக் கொண்டே செல்கிறது. இதேபோன்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறார்கள். திமுக அரசு அமைந்த உடன் தேர்தல் வாக்குறுதியில் கூறிய படி லிட்டருக்கு ரூ.3 குறைத்து சொன்னதை செய்துள்ளோம்.

இருந்தாலும் ஒன்றிய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. வேலை வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்ளை அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் பாஜ அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கும், தனியார் நிறுவனங்களிடம் அடகு வைப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறது. இதை எல்லாம் எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

பாசிச பாஜ அரசை கண்டித்தும், இந்த கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறும் வகையில் போராட்டங்கள் தொடரும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறிய படி பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், தேர்தல் வாக்குறுதியில் கூறிய பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>