புரட்டாசி மாத முதல் ஞாயிறு நாகை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை மந்தம்-கடைகள் வெறிச்சோடியது

நாகை : புரட்டாசி மாதம் கடந்த 17ம் தேதி முதல் தொடங்கியது. இந்த மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் பெரும்பாலான இந்துக்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது வழக்கம். இதனால் மீன், இறைச்சி விற்பனை மந்தமாக இருக்கும்.இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நாகை மாவட்டத்தில் இறைச்சி விற்பனை எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை. ஞாயிற்று கிழமைகளில் நாகையில் பரபரப்பாக இருக்கும் இறைச்சி கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

இறைச்சி மற்றும் மீன் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டதோடு இறைச்சி கடைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. நாகையில் பல இடங்களில் செயல்படும் இறைச்சி, மீன் கடைகளில் பெரும்பாலானவை திறக்கப்படவில்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கமாக இறைச்சி கடை ஒன்றில் குறைந்தது 5 ஆடுகள் முதல் 20 ஆடுகள் வரை வெட்டப்படும். ஆனால் நேற்று புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி கடையில் 2 அல்து 3 ஆடுகளுக்கு மேல் வெட்டப்பட வில்லை.

நாகை பப்ளிக் ஆபீஸ் ரோடு, மருந்து கொத்தளதெரு, பாரதி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் வெகு குறைவாகவே இருந்தது. வெட்டப்பட்ட ஆடு, கோழிகளை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்ற வகையில் வியாபாரிகள் கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை குறைவாக விற்றனர். அதேபோல அண்ணா சிலை அருகே உள்ள மீன் மார்க்கெட் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: