செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ரூ.13 லட்சத்துக்கு ஏலம்: விழுப்புரம் கலெக்டர் நேரில் விசாரணை

செஞ்சி: செஞ்சி அடுத்த பொண்ணங்குப்பத்தில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ளது பொண்ணங்குப்பம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 2500 பேரும், ஊராட்சிக்கு உட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் சுமார் 7,500 பேரும் உள்ளனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஆதிதிராவிடர் சமூகத்துக்கு ஒதுக்கப்பட்டது.  இதனை ஒரு தரப்பினர் பயன்படுத்தி ரூ.13 லட்சத்துக்கு முனுசாமி என்பவரின் மனைவி மங்கையை ஒருதலைபட்சமாக தேர்வு செய்தனர். இதற்கு பொண்ணங்குப்பம் பலரும் எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் கலெக்டர் மோகன், துத்திப்பட்டு பகுதிக்கு சென்று பொதுமக்களை அழைத்து பேசினார். அப்போது, ‘‘ இச்செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் புறம்பானது. இது தண்டனைக்கு உரியதாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவிகளுக்கு ஏலம் விடுவது மக்களின் உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் செயல். இதனை தடுக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்’’ என்று பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்ட சம்பவத்தால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: