இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்த ஆண்டுக்குள் புதிதாக 5 கல்லூரி தொடங்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ெசன்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 புதிய கல்லூரிகள், ஒரு சித்த மருத்துவமனை துவங்குவதற்கான பணிகள் குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசனை குழுக்கூட்டம் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கீதா ஜீவன், சக்கரபாணி, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், மார்க்கண்டேயன், ஏ.பி.நந்தகுமார், பி.எஸ்.டி.சரவணன், துரைசந்திரசேகர், சவுந்திரபாண்டியன், ஈஸ்வரன், அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ேசகர்பாபு பேசியதாவது:

தமிழகத்தில் உள்ள கோயிலுக்கு சொந்தமான 36 பள்ளிகள், 5 கல்லூரி மற்றும் 1 தொழில்நுட்ப கல்லூரி திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், அறநிலையத்துறையின் சார்பில் சென்னை மாவட்டம் கொளத்தூர், கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய 10 இடங்களில் புதிதாக கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பழநியில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியை சார்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு அமைத்து அடுத்த ஆண்டிற்குள் கல்லூரிகள் தொடங்குவதற்கான பணிகள் விரைவாக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முதலாக சிறந்த கல்வியாளர்களை கொண்டு கல்விக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 5 கல்லூரிகளும், அடுத்த ஆண்டுகளில் 5 கல்லூரிகள் தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா மூன்றாவது அலை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்கள் திறப்பதில் சாத்தியமில்லை. தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையிலும், கோயில்களில் மொட்டைக்கு கட்டணம் இல்லை என அறிவித்ததோடு 1749 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: