விவாகரத்து வழக்கில் உதவுவதாக கூறி பெண் அதிகாரியிடம் ரூ.13 லட்சம் பறிப்பு: போலி சிறை காவலர் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு, சிவப்பிரகாசம் நகர், வாட்டர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (32). பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார். கணவரை பிரிந்து தனியாக வசிக்கும் இவருக்கு, கடந்தாண்டு, முகநூல் மூலமாக கல்லூரியில் உடன் படித்த புழல், இந்திரா நகரை சேர்ந்த மதன்குமாருடன் (32) பழக்கம் ஏற்பட்டது. அப்போது லட்சுமிபிரியா, தனது கணவரை விவாகரத்து செய்ய உதவும்படி கேட்டுள்ளார். அதற்கு மதன்குமார், நான் புழல் சிறையில் காவலராக உள்ளேன். எனக்கு தெரிந்த பிரபல வழக்கறிஞர் மூலம் விவகாரத்து செய்ய ஏற்பாடு செய்கிறேன் என கூறியுள்ளார்.

இதனை நம்பிய லட்சுமி பிரியா, பல தவணையாக விவாகரத்து வழக்கு செலவுக்காக ரூ.13 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், பணத்தை திரும்ப கேட்டபோது, மதன்குமார், லட்சுமிபிரியாவை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து லட்சுமிபிரியா அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்தனர். விசாரணையில், மதன்குமார் இன்ஜினியர் என்பதும், காவலர் என பொய் சொன்னதும் தெரிந்தது. அவரிடம் இருந்தது போலி அடையாள அட்டையை பறிமுதல் செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Related Stories: