தமிழகத்துக்குள் அதிக தூரம் பயணிக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்படுமா?.. கன்னியாகுமரி பயணிகள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில்: கொல்லத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்னைக்கு இயக்கப்படும் சென்னை அனந்தபுரி ரயில் 2002ம் ஆண்டு முதல் வாரம் 6 நாள் ரயிலாக இயக்கப்பட்டது. 2005ம் ஆண்டுக்கு பிறகு தினசரி ரயிலாக மாற்றி தற்போதுவரை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மூலம் சுமார் 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட கல்குளம், விளவங்கோடு தாலுகாவை சேர்ந்த பாறசாலை, குழித்துறை, இரணியல் ரயில் நிலையத்தை சேர்ந்த பயணிகள் சென்னைக்கு செல்ல வசதி கிடைத்தது. இந்த ரயிலை குழித்துறை ரயில் நிலையத்தில் தான் அதிக அளவில் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த சிறப்பு ரயில் குமரி மாவட்ட பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றது. அப்போது கேரளாவை சேர்ந்த ராஜகோபால் ரயில்வே இணை அமைச்சராக இருந்ததால் திருவனந்தபுரம் - சென்னை என்ற வழித்தடத்தில் அனந்தபுரி  எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டப்பட்டு இயக்கப்பட்டது. பின்னர் இந்த ரயில் திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் நிலவும் இட நெருக்கடி காரணமாக கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டது. இந்த ரயில் மூலம் கேரள மாநிலத்தின் கொல்லத்தில் இருந்து தமிழகம் வழியாக குறைந்த தூரம் கொண்ட வழித்தடம் வழியாக சென்னைக்கு கூடுதல் ரயில் வசதி ஏற்படுத்தப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு 2 இரவு நேர தினசரி ரயில்கள் மட்டுமே உள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இருக்கைகள் கிடைப்பது இல்லை. இதனால் பெருவாரியான பயணிகள் அடுத்த தேர்வாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை நம்பி உள்ளனர். இந்த ரயில் மட்டுமே குமரியின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களையும் சென்னையுடன் இணைக்கிறது. இந்த  ரயில் அறிவிக்கப்பட்ட ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளில் கால அட்டவணை பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது.

அடிமேல் அடி வாங்கி எவ்வளவு மோசமான கால அட்டவணையில் இயக்க முடியுமோ அந்த அளவுக்கு தென்மாவட்ட பயணிகள் உபயோகப்படுத்த முடியாதபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மற்ற ரயில்களுக்காக இந்த ரயிலின் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்களுக்காக இந்த ரயிலின் கால அட்டவணை பலமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி நாகர்கோவில் - பெங்களூர் ரயில் அறிவிக்கப்பட்டதால் அந்த ரயிலுக்காக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வேகம் குறைக்கப்பட்டு பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் இந்த ரயில் மட்டுமே தமிழகத்தின் உள்ளே அதிக நேரம், அதிக தூரமாக 765 கி.மீ தூரம் பயணிக்கும் ரயில் ஆகும். இதனால் மற்ற ரயில்களை காட்டிலும் இந்த ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த ரயில் சென்னையிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது மணிக்கு 55 கி.மீ வேகத்தில் இயக்கி பயண நேரமாக 13 மணி 10 நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் மறு மார்க்கம் சென்னைக்கு செல்லும் போது மணிக்கு 51 கி.மீ வேகத்தில் பயணம் செய்து பயண நேரமாக 14 மணி 10 நிமிடங்கள் எடுக்கிறது.

சென்னை - மதுரை வழிப்பாதை இருவழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது  பணிகள் நடைபெற்று வரும் மதுரை- நாகர்கோவில் இருவழிபாதை பணிகள் கணிசமான அளவில் முடிவு பெற்றுவிட்டது. இவ்வாறு இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால் கிராசிங் ஆக அதிக நேரம் இந்த ரயில் நிறுத்திவைப்பது தவிர்க்கப்பட்டு விட்டது. இவ்வாறு இயக்கப்படுவதால் பல்வேறு ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரயில் காலஅட்டவணையின் சுமார் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் ரயில் நிலையங்களில் வந்து விடுகின்றது.

ஆனால் அடுத்து புறப்படுவதற்காக பழைய கால அட்டவணைபடி மணி நேரங்கள் காத்திருந்து புறப்பட்டு செல்கிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரம் கோட்ட மேலாளர் நாகர்கோவில் ரயில் நிலைய சுற்றுபயணத்தின் போது அனந்தபுரி ரயில் சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து நாகர்கோவிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 6 மணிக்கு சென்னை செல்லுமாறு காலஅட்டவணை மாற்றம் செய்யப்படும் என அறிவித்தார். தற்போது திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரை உள்ள வழித்தடம் மின்மயமாக்கப்பட்டதாலும் மதுரை  சென்னை வழிப்பாதை அதிக இடங்களில் இருவழிபாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாலும் எளிதாக இந்த ரயிலை சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றம் முடியும்.

ஆகவே இந்த ரயிலை சூப்பர்பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்து சென்னைக்கு தென்மாவட்டத்தில் இருந்து செல்லும் முதல் ரயிலாக இயக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

நிறுத்தங்கள் ரத்து கூடாது

அனந்தபுரி ரயிலை சூப்பர்பாஸ்ட் ரயிலாக இயக்கும்ேபாது திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள பாறசாலை, குழித்துறை, இரணியல், ஆரல்வாய்மொழி, வள்ளியூர், நான்குநேரி ஆகிய ரயில் நிலைய நிறுத்தங்களை ரத்து செய்யாமல் இயக்க வேண்டும். இந்த ரயில் நிலையங்களிலிருந்து தலைநகரான சென்னைக்கு வேறு ரயில் சேவை இல்லாததால் இந்த நிறுத்தங்களை ரத்து செய்ய கூடாது என இப்பகுதி பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: