அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

செங்கல்பட்டு: சமீபத்தில் தமிழகம் முழுவதும் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், பழவேலி கிராமத்தில் உள்ள இருளர் மக்களுக்கு, வன உரிமை பாராதினம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு, திருநங்கைகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை, முதியோர் உதவித்தொகை என ரூ.1.23 கோடியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் ராகுல் நாத் தலைமை வகித்தார். எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், வருவாய் துறை சார்பில், பழவேலி கிராம இருளர் மக்களுக்கு வன உரிமை பாராதினம், ஊரக வளர்ச்சி முகமை மூலமாக அவர்களுக்கு வீடு அமைய, பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் வேலை உத்தரவு வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. பழவேலி இருளர் இன மக்களில் 24 மாணவர்களுக்கு ஜாதி சான்று, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக 84 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டையும், உணவு வழங்கல் துறையின் மூலமாக 19 திருநங்கைகளுக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு, மாவட்ட தொழில் மையம் சார்பில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.32.35 லட்சத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி, முதியோர் ஓய்வூதியம் என 1.23 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் ஏறத்தாழ 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த பெருமை முதல்வர் மு.க.ஸ்டாலினையே சேரும் என்றார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், ஏஎஸ்பி ஆதார்ஸ் பச்சோரா, மகளிர் திட்ட இயக்குநர் தர், செங்கல்பட்டு ஆர்டிஓ சாகிதா பர்வீன், மாவட்ட சமூக நல அலுவலர் சங்கீதா, மாவட்ட தொழில் மைய மேலாளர் ரமணி, மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: