கடினமாக இருந்ததால் மருத்துவர் கனவு பாழானது நீட் தேர்வு எழுதிய அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை: சோகத்தில் மூழ்கிய கிராமம்

தா.பழூர்: நீட் தேர்வு கடினமாக இருந்ததால் மருத்துவர் கனவு பாழானதால், அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவம், தமிழகத்தில் மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு கடந்த 12ம் தேதி (ஞாயிறு) நாடு முழுவதும் நடைபெற்றது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூளையூர் பகுதியை சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் 2வது மகன் தனுஷ்(19) மருத்துவராக ேவண்டும் என்ற கனவில் இரண்டு முறை நீட் தேர்வு எழுதியிருந்தும் தேர்ச்சி பெற முடியவில்லை. எனினும் 3வது முறையாக நீட் தேர்வு எழுத தயாராகி இருந்தார். 3வது முறையும் தேர்ச்சி பெறாவிட்டால் மருத்துவராகும் கனவு பாழாகி விடுமே என்ற அச்சத்தில் 12ம் தேதி அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு எழுதாமலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம், தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், அரியலூரில் ஒரு மாணவியும் தேர்வு கடினமாக இருந்ததால் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே துளரங்குறிச்சி கிராமத்தை  சேர்ந்தவர் கருணாநிதி. வழக்கறிஞர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இவரும் வக்கீலுக்கு படித்துள்ளார். தம்பதிக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் கயல்விழி (20). இவர், பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி(17). இவருக்கு, சிறுவயதிலிருந்தே டாக்டர் ஆக வேண்டும் என ஆசை. ஜெயங்கொண்டம் அருகே தனியார் பள்ளியில் படித்த கனிமொழி,  10ம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். பின்னர் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்த இவர், 12ம் வகுப்பில் 562  மதிப்பெண் (93 சதவீதம்) பெற்றார்.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று டாக்டருக்கு படிப்பேன் என்று பெற்றோரிடம் கனிமொழி அடிக்கடி கூறி வந்தார். அதன்படி, கடந்த 12ம்தேதி தஞ்சையில் தனியார் பள்ளியில் கனிமொழி நீட் தேர்வு எழுதினார். வீட்டிற்கு வந்து மிகவும் சோகத்துடன் இருந்த கனிமொழி, நீட்தேர்வு கடினமாக இருந்தது. இயற்பியல் மற்றும் வேதியல் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  சரியான பதில் தெரியவில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் கவலைப்பட வேண்டாம். அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் கூறியுள்ளனர். எனினும் மருத்துவராகும் கனவு பாழாகி விட்டதே என மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதை உணர்ந்த தந்தை கருணாநிதி, நேற்றுமுன்தினம் காலை கனிமொழியை ஜெயங்கொண்டத்தில் உள்ள தனது வக்கீல் அலுவலகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாலை 5 மணி அளவில் துளரங்குறிச்சி கிராமத்தில்  உள்ள வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். அந்நேரம், அரியலூரில் உள்ள தனது உறவினரின் (கிடாவெட்டு) நிகழ்ச்சிக்கு சென்றிருந்த மனைவி ஜெயலட்சுமியை அழைத்து வருவதற்காக கருணாநிதி அரியலூர் சென்றார். பின்னர் இரவு  8.30 மணி அளவில் 2 பேரும் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது  கதவை தட்டி வீட்டை திறக்கும்படி மகளை கூப்பிட்டு உள்ளனர்.

ஆனால் எந்த சத்தமும் வராததால் பின்பக்கம் உள்ள ஆஸ்பெட்டாஸ் சீட்டுக்கும், ஹாலோபிளாக் கல்லுக்கும் இடையே உள்ள ஓட்டை வழியாக உள்ளே இறங்கி கருணாநிதி பார்த்துள்ளார். அங்கு முன்பக்க  வராண்டாவில் குறுக்கு கம்பியில் நைலான் கயிறினால் கனிமொழி தூக்கில் தொங்கி கொண்டிருந்தது தெரிய வந்தது. இதில் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இதையடுத்து மகளை காரில் ஏற்றிக் கொண்டு தனது சொந்த ஊரான சாத்தம்பாடி கிராமத்திற்கு வந்துள்ளனர். தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

நேற்று பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், மாணவியின்  உடல் சாத்தாம்பாடி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தமிழத்தில் நீட் தேர்வினால் கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 1ம்தேதி அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதாவும், 2020ம் ஆண்டு  செப்டம்பர் 10ம் தேதி அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலந்தகுழி கிராமத்தை சேர்ந்த விக்னேஷூம் தற்கொலை செய்து கொண்டனர்.  தற்போது அரியலூர் மாவட்டத்தில் மூன்றாவதாக மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: