மாணவர், இளைஞர் அமைப்பு கூறியது போல் ராகுல் மீண்டும் தலைவராக வேண்டும்: மகிளா காங்கிரசும் தீர்மானம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பும், இளைஞர் அமைப்பும் நிறைவேற்றிய தீர்மானம் போன்று மகிளா காங்கிரசும் ராகுல்காந்தியே கட்சியின் தலைவராக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. கடந்த 6ம் தேதி கோவாவில் நடந்த இந்திய இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள்  கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல்காந்தி ஏற்க  வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், கடந்த 12ம் தேதி  நடந்த காங்கிரசின் மாணவர் பிரிவான என்எஸ்யுஐ கூட்டத்தில், ராகுல்காந்தியே கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.  

அவர்கள் வெளியிட்ட தீர்மானத்தில், ‘ராகுல் காந்தியின் தொலைநோக்கு  திட்டத்தின் கீழ் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். மாணவர்களுக்காக  ராகுல் காந்தி குரல் கொடுப்பதை வரவேற்கிறோம். அவரது கரங்களை  வலுப்படுத்துவோம். அவரது தலைமையின் கீழ் இந்தியா மிகவும் நிலையான மற்றும்  அமைதியான சமுதாயமாக வளர்ந்து வெற்றியின் உச்சத்தை அடையும்’ என்று  தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் நடந்த மகிளா காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டத்தில், மகிளா மோர்ச்சா செயல் தலைவர் நெட்டா டிசோசா, மகிளா காங்கிரஸ் பொது செயலாளர் ஷமினா ஷபிக், டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவர் அம்ரிதா தவான் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

தீர்மானத்தை வாசித்த தவான், ‘பெண்கள் பிரச்னைகளுக்கு ராகுல்காந்தி தொடர்ந்து வலுவான ஆதரவை அளித்து வருவதை பாராட்டுகிறோம். ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும். பெண்களின் மரியாதை மற்றும் உரிமைகள் குறித்து ராகுல் காந்தி பேசுவதை பெண்கள் நம்புகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது நேர்மை, மற்ற தலைவர்களிடமிருந்து அவரை அடையாளப்படுத்துகிறது’ என்றார்.

Related Stories: