காப்புக்காட்டில் குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் சேதம் 3 ஆண்டுகளாக சீரமைக்காத சாலை: அமைச்சர், கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

புதுக்கடை: சுனாமி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக குழித்துறை ஆற்றில் விளாத்திவிளை பகுதியில் கிணறுகள் அமைக்கப்பட்டு, ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி, சுத்திகரிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக தண்ணீர் எடுத்துச் செல்ல போடப்பட்டுள்ள குழாய்கள் சாலைகளை உடைத்து   பதிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் கேமாக வெளியேறுவதால் சாலைகளில்  ராட்சத பள்ளம் ஏற்பட்டு வருகிறது.   இதுபோன்று புதுக்கடை அருகே காப்புக்காடு  அத்திக்குழி சந்திப்பு பகுதியிலிருந்து விளாத்திவிளை வழியாக அஞ்சாலிக் கடவு  செல்லும் சாலையில்  நீரேற்று நிலையத்திற்கு தண்ணீர் எடுத்துச் செல்ல ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்த சாலையில்   அத்திக்குழி சந்திப்பு முதல் விளாத்திவிளை வரை  உள்ள பகுதியில் அடிக்கடி ஏற்படும் குழாய் உடைப்பால்  ரோடு பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால்  மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியை  சுற்றி மேலவிளை, குழிவிளை, விளாத்திவிளை, கண்ணயம் பழஞ்சி, பாக்கோடு - பாறவிளை, தெக்கன்விளாகம், மாராயபுரம்  உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.  இந்தக் கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் முக்கிய சாலையாக  இந்த சாலை   உள்ளது. சாலையில்  சிதறிக் கிடக்கும் ஜல்லி கற்கள் நடந்து செல்லும் பாதசாரிகளையும், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும்  பதம் பார்க்கிறது.

இந்த சாலையை சீரமைக்க கோரி விளாத்திவிளை பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் சாலை சீரமைக்க வில்லை. தற்போது மழைநீர்  தேங்கி, சாலையில்  குண்டு குழிகள்  தெரியாமல் பல  விபத்துகள்  நடந்து  வருகிறது.   எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில்   முஞ்சிறை ஒன்றிய திமுக  தகவல் தொழில்நுட்ப துறை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜெபமோகன் டேவிட் மற்றும் பென்னெட் ஆகியோர் தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ், மற்றும்  மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை  மனு  அளித்துள்ளனர்.

Related Stories: