நாகை மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்-31,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாகை : நாகை மாவட்டத்தில் நடந்த கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அருண்ராய், சந்தீப்நந்தூரி ஆகியோர் தலைமையில், கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நேற்று பார்வையிட்டனர். மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 31,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.நாகை மாவட்டத்தில் நேற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் தெற்கு பால்பண்ணைச்சேரி நகராட்சி தொடக்க பள்ளி, சவேரியார்கோவில் தெரு கட்டிட உரிமையாளர் சங்கம், வேளாங்கண்ணி ஆர்ச் திருப்பயணிகள் தங்கும் இடத்தில் நடந்த கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அருண்ராய், சந்தீப்நந்தூரி, கலெக்டர் அருண்தம்புராஜ் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது கலெக்டர் அருண்தம்புராஜ் கூறியதாவது:

முதல்வர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் கோவிட்- 19 மாபெரும் தடுப்பூசி முகாம் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தது. இதை கண்காணிக்க கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்ற இடங்களில் 325 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கபட்டு 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 51 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியினையும், 11 சதவீத மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியினையும் செலுத்தியுள்ளார்கள். மீனவ பெருமக்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள், நீரழிவு நோய் மற்றும் ரத்தகொதிப்பு உள்ள அனைவரும் தவறாமல் தடுப்பூசி கொண்டுள்ளனர். நாகை மாவட்டத்தில் நேற்று 31,492 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது.

இருப்பினும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். பொதுமக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கொரோனா 3ம் அலையிலிருந்து நம்மை காப்பதற்கு ஒரே ஆயுதம் அனைவரும் தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார். துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) விஜயகுமார், நகராட்சி ஆணையர் தேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பேரூராட்சியில் சுமார் 15 ஆயிரம்  மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற மாபெரும்  தடுப்பூசி முகாமையொட்டி நேற்றுமுன்தினம் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி  செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை  ஏற்படுத்தப்பட்டது. இந்த பிரசாரம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால்  நேற்று தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள 748 பேர் முகாமிற்கு வந்து தடுப்பூசி  செலுத்திக் கொண்டனர். முகாமை நாகை கலெக்டர் அருண் தம்புராஜ் ஆய்வு  செய்தார். வேதாரண்யம் கோட்டாட்சியர் துரைமுருகன், பேருராட்சி செயல் அலுவலர்  குகன் உடனிருந்தனர்.

கீழ்வேளூர்: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள 38 ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்த 45 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. முகாம்களில்  3,558  பேருக்கு முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Related Stories: