ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நேற்று நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில், மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி எனும் நோக்கில் நேற்று மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என 847 இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளிலும், கலெக்டர் அலுவலகம், வ.உ.சி. மார்க்கெட், ஆர்.கே.வி., ரோடு சிறிய பார்க் மற்றும் 2 நடமாடும் வாகனங்கள் உட்பட 65 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில், ஈரோடு மாநகராட்சி சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்ட கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநருமான தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர், திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை சீனாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திங்களூர் அப்பிச்சிமார் மடம், சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோபி டைமண்ட் ஜூப்லி பள்ளி ஆகியவற்றில் நடந்த தடுப்பூசி முகாமிற்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, ஈரோடு மாநகராட்சி கமிஷனா் இளங்கோவன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த முகாம்களில் காலை 10 மணிக்கு பிறகு மக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவிந்தனர். இந்த முகாமானது நேற்று இரவு 8.30  மணி வரை நடந்தது குறிப்படத்தக்கது.கோபி: தமிழகத்தில் நேற்று மெகா  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கோபியில் 100 க்கும் மேற்பட்ட இடங்களில்  சிறப்பு கொரோனா தடுப்புசி முகாம் நடைபெற்றது.

இந்த தடுப்பூசி முகாமினை  ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சனாமூர்த்தி கோபி வைரவிழா மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமினை ஆய்வு செய்தார்.  அதைத்தொடர்ந்து சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம், கொடிவேரியில் நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்தார். ஆய்வின் போது  கோபி வருவாய் கோட்டாட்சியர் பழனிதேவி, கோபி வருவாய் வட்டாட்சியர் தியாகராஜன்,கோபி நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சிறுவலூர் வட்டார மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஜவுளிக்கடையில் 5சதவீத தள்ளுபடி

ஈரோடு மாநகராட்சியில் சிறப்பு தடுப்பூசி முகாம் 2 நடமாடும் வாகனம் உட்பட 65  இடங்களில் நேற்று நடந்தது. இதில், 13ஆயிரம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது.

இந்த முகாமில் தடுப்பூசி போடுவதை ஊக்கப்படுத்தும்  வகையிலும், போட்டவர்களை கவுரவிக்கும் வகையில் ஈரோடு ஆர்.கே.வி., ரோட்டில்  பிரபல ஜவுளிக்கடையில் (தி சென்னை சில்க்ஸ்), நேற்று தடுப்பூசி  போட்டுக்கொண்டு வரும் மக்கள் வாங்கும் ஜவுளிகளுக்கு 5 சதவீத தள்ளுபடி  வழங்கப்பட்டது. இதனால், அந்த ஜவுளிக்கடையின் எதிரே உள்ள திரு.வி.க.,  பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி முகாமில் மக்கள் ஆர்வமாக  தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

Related Stories: