காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் , செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் பெருநகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம பகுதிகள் என 600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நேற்று நடைபெற்றது. ஒவ்வொரு முகாமிலும் 100 தடுப்பூசிகள் வீதம் செலுத்தப்பட்டது. இந்த முகாம் ஆனது காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. மேலும் நடமாடும் வாகன முகாம்கள் மூலமாகவும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

 ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் தடுப்பூசி போடுவதற்காக செவிலியர்கள், தகவல்களை பதிவிடுவதற்காக தகவல் பதிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து வர 4 நபர்கள் முறையே சத்துணவு பணியாளர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை சார்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த கொரோனா தடுப்பூசி ஆனது நூறு சதவீதம் பாதுகாப்பானது ஆகவே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி நிலுவையில் இருந்தவர்கள் இந்த முகாமில் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டனர்.

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக ஒலிமுகமது பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி, சிறு காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற சிறப்பு முகாமினையும், வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் ஒன்றியம் திம்மசமுத்திரம் ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அப்பொழுது அங்கிருந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்தி கொள்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். கொரோனாவை தடுப்பதற்கு நம் கையில் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி. ஆகவே அனைவரும் இச்சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தினார். மேலும் காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் உள்ள சாலையோர வியாபாரிகளிடம் மாவட்ட கலெக்டர் நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பழனி, காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஆணையர் லட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவிட்-19 மாபெரும் சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று மாவட்டம் முழுவதும் 936 மையங்களில் நடைபெற்றது. இந்த முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாக இயக்குனருமான பொன்னையா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆராகுல் நாத்  மாவட்ட எஸ்.பி.விஜயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். தமிழக அரசின் உத்தரவின்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக நடைபெற்றது.  

இம்மாவட்டத்தில், ஏற்கனவே 867322 நபர்களுக்கு முதல் தவணையும், 281,250 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் மக்கள் தொகையில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் 10,31422 பேர் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மாபெரும் தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. 936 இடங்களில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாம் மூலம் சுமார் 70 ஆயிரம் பேருக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட நிர்வாகமும், சுகாதாரதுறையும் தெரிவித்தது.

Related Stories: