ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து 30 நாட்களில் இறந்தவர்களுக்கே கொரோனா இறப்பு சான்றிதழ்: ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

புதுடெல்லி: ‘கொரோனா பாதிப்பால் வீட்டிலோ அல்லது மருத்துவ முகாம்களிலோ மரணமடைந்தவர்கள், ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொண்டதில் இருந்து 30 நாட்களுக்குள் இறந்திருந்தால் மட்டுமே கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்’ என ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலையால் ஏராளமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனாலும், இறந்தவர்களுக்கு கொரோனா மரணம் என இறப்பு சான்றிதழில் குறிப்பிடப்படுவதில்லை. பிற துணை நோய்கள் மரணத்திற்கு காரணம் என குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக, கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் அறிவித்துள்ள பல்வேறு நிதி உதவிகளை பெறுவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. இதற்கிடையே, கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு நிதியும், கொரோனா இறப்பு சான்றிதழும் வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தொடரப்பட்டது. இந்த வழக்கில், கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறை வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்ட பிறகும் கூட ஒன்றிய தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இதனால், கடந்த 3ம் தேதி வழக்கு விசாரணையின் போது, ‘நீங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்குள் 3ம் அலையே முடிந்து விடும், ‘கொரோனா மரணம்’ என இறப்பு சான்றிதழில் குறிப்பிடுவது தொடர்பாக வரும் 13ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள்,’ என நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்ரா போஸ் அமர்வு ஒன்றிய அரசின் மீது கடும் அதிருப்தி தெரிவித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில், கொரோனா இறப்பு சான்றிதழ் தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ஐசிஎம்ஆர்) நேற்று புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டன.  

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட, சம்மந்தப்பட்ட நபர் தற்கொலை, கொலை அல்லது விபத்தால் மரணம் அடைந்திருந்தால் அது கொரோனா மரணமாக கருதப்படாது.

* மருத்துவமனையிலோ அல்லது மருத்துவ முகாமிலோ மருத்துவர் ஒருவரால் ஆர்டி-பிசிஆர், மாலிகுலர் சோதனை, ராபிட் ஆன்டிஜென் சோதனை அல்லது மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு அவர், மருத்துவமனை அல்லது மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

* மருத்துவமனை அல்லது வீடுகளில் இறந்த நோயாளிகளுக்கு, இறப்பு சான்றிதழில் மரணத்திற்கான காரணமாக படிவம் 4 அல்லது படிவம் 4ஏ வழங்கப்பட்டிருந்தால், அது கொரோனா மரணமாக கருதப்படும்.

* மருத்துவமனைக்கு வெளியிலோ அல்லது மருத்துவ முகாமிலோ ஒரு நோயாளி பரிசோதனை செய்து கொண்ட தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் இறந்தால் மட்டுமே, அது கொரோனா மரணமாக கருதப்படும்.

* அதே சமயம், மருத்துவமனையில் அல்லது மருத்துவ முகாமில் அனுமதிக்கப்பட்டு 30 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று இறந்தாலும் அது கொரோனா மரணமாக கருதப்படும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய பிரமாண பத்திரம் உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிதாக 28,591 பேருக்கு கொரோனா நாட்டில் நேற்று காலை 8 மணி வரையுடன் முடிந்த 24 மணி  நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கை குறித்த புள்ளி விவரங்களை ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* குணமடைந்தோர் சதவீதம் 97.51 ஆக ஆக பதிவாகி உள்ளது.

* நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேர் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 338 கொரோனாவால் இறந்துள்ளனர். இதன்மூலம், நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 42 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.

* 6,595 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 3,84,921 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* 73.82 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் இதுவரையில் 54 கோடியே 18 லட்சத்து 5 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: