புதுச்சேரி ஜிப்மரில் சூரிய மின்சக்தி திட்டம்: துணை ஜனாதிபதி துவக்கி வைத்தார்

புதுச்சேரி:  புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பாரதியார் அருங்காட்சியகத்தை நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பார்வையிட்டு அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவனையில், ரூ.7.67 கோடியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் பேனல் சூரிய மின்சக்தி பயன்பாடு திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி பேசுகையில், நாட்டில் உள்ள மருத்துவமனையிலேயே ஜிப்மரில் தான் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி சுற்றுச்சூழலுக்கு உகந்தது. சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி சாதனங்களை அனைத்து அரசு கட்டிடங்களில் பொருத்துவதும், மழைநீர் சேகரிப்பும் கண்டிப்பான தேவையாக உள்ளது. புதிய கட்டிடங்களில் இதை செய்யவேண்டும் என்றார். விழா மேடையில் மரபுப்படி முதலில் முதல்வர் ரங்கசாமி பேசியிருக்க வேண்டும். ஆனால், முதலில் கவர்னர் தமிழிசையை பேச அழைப்பு விடுக்கப்பட்டது. உடனே துணை ஜனாதிபதியும், கவர்னர் தமிழிசையும் முதல்வரை பேச அழைக்குமாறு கூறினர். ஆனால் கடைசிவரை ரங்கசாமி பேச மறுத்துவிட்டார்.

Related Stories: