திருப்பத்தூரில் உள்ள நகராட்சி பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அவலம்: பாழடைந்து கிடக்கும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சி எதிரே உள்ள சேர்மன் வீரபத்திர முதலியார் சிறுவர் பூங்கா நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால்  சிதிலம் அடைந்து கிடக்கிறது என்பதால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. திருப்பத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரே சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் சேர்மன் வீரபத்திர முதலியார் சிறுவர் பூங்கா உள்ளது. இந்த சிறுவர் பூங்கா நகர மக்களின் பொழுதுபோக்காக இருந்து வருகிறது. நகர பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், உடற்பயிற்சி மேற்கொள்வதும் அங்குள்ள சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு உள்ளிட்டவைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.

திருப்பத்தூர் பகுதியில் ஏராளமான சிறுவர்,  சிறுமியர் தங்கள் பெற்றோர்களுடன் வந்து பொழுதை கழிக்கும் பூங்காவாக இருந்துவந்த சூழ்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் ருத்ர தாண்டவத்தினால் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டு இருந்தது.  தற்போது தமிழக அரசின் சிறிய  தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் பூங்கா திறக்கப்பட்டாலும் ஏற்கனவே மூடிக்கிடந்த காலகட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளின் அலட்சியத்தால் பூங்காவில் உள்ள அனைத்து விளையாட்டு உபகரணங்களும் சிதலமடைந்து காணப்படுகிறது.

இதனால் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுவதால் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புக்குள் பூங்கா உள்ளது.

இந்நிலையில்  பூங்காவிற்குள் வருகின்ற ஒரு சில குழந்தைகளின் பெற்றோர்களும் கூட முகம் சுளிக்க வைக்கும் வகையில் அசுத்தமாகவும் குப்பைமேடுகளாகவும் நோய்தொற்று பரவக் கூடிய அபாயகரமான நிலையில் பூங்கா இருக்கிறது. மேலும் பல லட்சங்கள் செலவழித்து அங்கு உருவாக்கப்பட்ட நவீன கழிப்பிடங்கள் கூட பராமரிப்பின்றி சேதமடைந்து அசுத்தமாக துர்நாற்றம் வீசக் கூடிய வகையில் இருக்கிறது. மேலும் சமூக விரோதிகள் பலர் இந்த பூங்காவை மது அருந்தும் கூடாரமாக அமைத்து ஆங்காங்கே மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது.  மேலும் இரவு நேரங்களில் பல்வேறு சமூக விரோத செயல்களும் நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய சிறுவர் பூங்கா சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து  பூங்காவை முழுமையாக பொதுமக்கள் உபயோகிக்கும் வகையில் பராமரித்து சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் பூங்காவை பொதுமக்கள் மற்றும் சிறுவர் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டுமென்று சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Related Stories: