ஆசிரியரை கடத்தி பணம் பறிப்பு: சென்னை வளசரவாக்கம் பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. மீது வழக்கு..! கோர்ட் உத்தரவின் பேரில் நடவடிக்கை

திருச்செந்தூர்: திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு ஆசிரியர் கடத்தப்பட்டு ரூ.4.50 லட்சம் பறித்த சம்பவத்தில் பெண் இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட 6 போலீசார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே குறிப்பான்குளம், குப்பாபுரத்தைச் சேர்ந்தவர் சாலமோன் (52). வைகுண்டம் அருகே அரியநாயகிபுரம் தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவி புஷ்பராணி ஜெபமங்களம் மற்றும் குடும்பத்தினருடன், 2020ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி உறவினர் திருமணத்திற்காக திருச்செந்தூர் அருகே சோலைகுடியிருப்புக்கு வந்தனர். அன்று இரவு சாலமோனை செல்போனில் தொடர்பு கொண்ட அவரது உறவினர் தினேஷ், அவரிடம் ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி பேச வேண்டும் என்றும், அதனால் வீட்டை விட்டு வெளியே வரும்படியும் கூறியுள்ளார்.

அதன்படி வெளியே வந்த சாலமோனை அங்கு ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி அந்த இடத்தில் நின்றிருந்த 7 பேர் கடத்தினர். வேனில் சாலமோனிடம், ‘‘உனது தம்பி தேவராஜ் ரூ.21 லட்சம் எனக்கு தர வேண்டும். உன்னை கடத்தினால் தான் பணம் கிடைக்கும்’’ என்று அந்த 7 பேரில் ஒருவரான சிவகுமார் நாயர் என்பவர் தெரிவித்துள்ளார். சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மறுநாள் 24ம் தேதி வேன் சென்றது. அங்கு அவரை விடுவிக்க ரூ.3 லட்சமும், வேன் வாடகை ரூ.1.50 லட்சமும் வேண்டும் என கேட்டுள்ளனர். இதையடுத்து மனைவி புஷ்பராணியிடம் பேசி, சென்னையில் உள்ள அவரது சகோதரியின் கணவர் மூலம் போலீசாரிடம் ரூ.4.50 லட்சத்தை கொடுக்க சாலமோன் ஏற்பாடு செய்தார். இதில் ரூ.3 லட்சம் நிதி நிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து சாலமோனின் மனைவி புஷ்பராணி, திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் எஸ்பி, டிஐஜி ஆகியோரிடமும் மனு கொடுத்தார். போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சாலமோன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் தாலுகா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் நிதிநிறுவன உரிமையாளர் சிவக்குமார் நாயர், சென்னை வளசரவாக்கம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா, எஸ்ஐ ரமேஷ்கண்ணன் மற்றும் அடையாளம் காட்டக் கூடிய 4 போலீசார் ஆகிய 7 பேர் மீது ஆள் கடத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: